tamilnadu

img

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ‘மோசடி’ வேலையா’?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம்  தேதி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ரத்து செய்தபிறகு, அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தான். மாநிலத்தில் உள்ள 310 ஒன்றியங் களில் அக்டோபர் 24 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஆனால் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்படும். மாநிலத்தின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், தகவல்  தொடர்பு துண்டிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகிவிட்ட நிலையில், இந்தத் தேர்தல் நடப்பது ``மோசடி வேலை’’ என்றும், ``ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்’’ என்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். இது ``அரசியல் வெற்றிடத்தை’’ ஏற்படுத்தி, மத்திய அரசின் மீதான நம்பகத் தன்மையை மேலும் குறைப்பதாக ஆகி விடும் என்று அவர்கள் எச்சரித்தனர். ஆனால் “ஒவ்வொரு தலைவர் பற்றியும் தனித்தனியாக ஆய்வு செய்து, ஒவ் வொருவராக படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்’’ என்று ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் பாரூக் கான் கூறியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இது எப்போது நடக்கும், எவ்வளவு காலத்தில் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய முடிவை வரவேற்ற ஜம்மு பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை மாநில நிர்வாகம் சமீபத்தில் விடுதலை செய்தது. ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள, காஷ்மீர் பகுதியில் இன்னும் பதற்றம் நீடிக்கிறது. அந்தப் பகுதியில் தொலைத் தொடர்பு இன்னும் துண்டி க்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இன்டர்நெட் மற்றும் செல்போன் சேவைகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. கட்சித் தொண்டர்களையும், வேட்பா ளராக நிற்கக் கூடியவர்களையும் கூட தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அரசியல் கட்சி கள் கூறுகின்றன. கட்சித் தொண்டர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்ட னர். பெரும்பாலான உள்ளூர் கட்சி அலுவலகங்கள் மூடிக் கிடக்கின்றன. “யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபோது, வேட்பாளர்களை நாங்கள் எப்படி தேர்வு செய்ய முடியும்? காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த எங்களின் முக்கிய தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் உள்ள னர்’’ என்று தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த ரவீந்தர் ஷர்மா கூறினார். செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்குக் கூட தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாந்தர்ஸ் கட்சி

ஜம்மு-காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷ் தேவ் சிங் 58 நாள் காவலுக்குப் பிறகு அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். தேர்தலில் நம்பகத்தன்மை வர வேண்டுமானால், அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர் களுக்கு “சம அளவிலான வாய்ப்பு கள்’’ வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.     “இது பெயரளவில் நடைபெறும் தேர்தல் போலத் தோன்றுகிறது. பள்ளத் தாக்குப் பகுதியில் தேர்தல்கள் நடத்தப் படுகின்றன என்று காட்டுவதற்காக நடத்தப்படுவதாகத் தெரிகிறது.’’

“எல்லாமே முடக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது அரசியல் பற்றிப் பேசுவது பொருத்தமற்றது’’ என்று தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த தேவேந்தர் ரானா கூறுகிறார். “இந்தச் சூழ்நிலையில் அரசியல் நடவடிக்கை எப்படி நடக்க முடியும்? அரசியல் தொண்டர்கள் மக்களை சந்தித்து, அவர்களுடைய விருப்பங் களை அறிந்து தலைவர்களுக்குத் தெரிவித்தால் தான், இந்த அமைப்பு சிறப்பாக இருக்க முடியும்.’’

ஜனநாயகப்படுகொலை

இயக்கவாதியாக இருந்து அரசியல் வாதியாக மாறி, புதிதாக தொடங்கப் பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கத் தில் சேர்ந்த ஷெஹ்லா ரஷீத், அரசி யலை விட்டு விலகுவதாகக் கூறியுள் ளார். “இங்கு நடைபெறுவது ஜனநாய கம் அல்ல. ஜனநாயகப்படுகொலை. பொம்மை போல செயல்படும் தலைவர்களை பதவியில் அமர்த்து வதற்கான முயற்சி’’ என்று அந்தப் பெண் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், தேர்தல் வாய்ப்பு கள் குறித்து பாஜக படு உற்சாகமாக இருக்கிறது. - தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக வும், சுயேச்சைகளுக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும் அந்தக் கட்சி கூறியுள்ளது. “காஷ்மீரில் அரசியல் வெற்றிடம் எதுவும் கிடையாது’’ என்று பாஜக வைச் சேர்ந்த ரவீந்தர்ரெய்னா கூறுகிறார். மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பி. டி.பி.) தேசிய மாநாட்டுக் கட்சியும் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த மூர்க்கத்தனமான அரசியலில் புதிய ரத்தம் பாய்ச்சுவதாக இந்தத் தேர்தல்கள் இருக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.

குழப்பமான நிர்வாக நிலையை உருவாக்கும்

முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது, இந்தி யாவில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. மக்கள் பாதுகாப்பு சட்டத்தின்  (பி.எஸ்.ஏ.) கீழ் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டுள்ளார். முறையான குற்றச் சாட்டு எதுவும் பதிவு செய்யாமல் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்க அந்தச் சட்டம் வகைசெய்கிறது. அப்துல்லா மீதான நடவடிக்கைகள் அதிர்ச்சி தரும் வகையில் இருப்பதாக காஷ்மீரிகள் பலர் கூறுகின்றனர்.

தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் அப்துல்லாவையும், காவலில் உள்ள அவருடைய மகன் உமர் அப்துல்லாவையும் சந்தித்தனர். “சூழ்நிலை குறித்து அவர்கள் கவ லை தெரிவித்தனர். மக்களைப் பற்றி அவர்கள் கவலை தெரிவித்தனர்’’ என்று இரு தலைவர்களையும் சந்தித்த தேவேந்தர் ரானா கூறினார். தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பதால், அரசியல் நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை பாஜக மறுக் கிறது. ஆனால் “காஷ்மீரில் குழப்ப மான நிர்வாக நிலைமையை உருவாக்கு வதாக’’ இந்தத் தேர்தல்கள் அமைந்து விடும் என்று அரசியல் நிபுணர் நூர் அஹமது பாபா எச்சரிக்கிறார்.“இது அடக்குமுறையிலான, திணிக்கப்பட்ட நடைமுறையாக இருக்கும். இது எதிர்ப்பை, கோபத்தை, நம்பிக்கை இல்லாத நிலையை உருவாக்கும்’’ என்று அவர் கூறுகிறார்.

வினீத் கரே, 
பிபிசி இந்தி செய்தியாளர்