புதுச்சேரி:
புதுச்சேரியில் முககவசம் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட சொன்ன அதிகாரியை ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் சேர்ந்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் ரூபாய் 100 அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இதனிடையே ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கியதை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த வாரம் முதல் ஓட்டல்கள், கடைகளை பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்கு வேலை செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அவ்வாறு அணியாதவர் களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கும் அதிகாரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் புதுச்சேரி காந்திவீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் பணிபுரிந்தது தெரியவந்தது. உடனே நகராட்சி அதிகாரிகள், அந்த நபர்களை எச்சரித்து, அபராதம் செலுத்தும்படி கூறினர். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அபராதம் செலுத்த மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஓட்டலில் பணிபுரிந்த மூன்று பேர் அபராதம் கேட்ட நகராட்சி அதிகாரிகளை திட்டி, தாக்கியதாக கூறப் படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.