tamilnadu

img

கடும் அடிவாங்கிய சுற்றுலா - கட்டுமான தொழில்கள்..... கொரோனாவால் 5 துறைகள் மோசமாக பாதிப்பு...

புதுதில்லி:
சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சிறு- குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட 5 துறைகள், கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கொரோனா பரவலைத் தடுக்க, மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நாட்டின் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் முடங்கியது. இது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. 

இந்த பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் என்று பல்வேறு பொருளாதார தரமதிப்பீட்டு நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் கொரோனா பாதிப்பால் வருவாய் வீழ்ச்சியும் பணியிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், கட்டுமானம், ஆட்டோமொபைல், விமானப் போக்குவரத்து மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களே, கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகள் என்று ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு முன்னரே கட்டுமானத் துறை மோசமான நிலையில்தான் இருந்தது என்றாலும், கொரோனாவுக்குப் பின் இத்துறை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இத்துறைக்கு வழங்கப்படும் கடன்களில் 24 சதவிகிதக் கடன்கள் வராக் கடன்களாக மாறியுள்ளன. நகை மற்றும் ரத்தினங்கள் துறையில் வராக் கடன்களின் அளவு 25 சதவிகிதமாக இருக்கும் நிலையில், இவற்றுக்கு அடுத்ததாக கட்டுமானத் துறையில்தான் வராக் கடன்கள் அதிகமாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.