புதுதில்லி:
பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 68 ஆக இருந்த நிலையில், 2019-இல் அது 110 ஆக அதிகரித்துள்ளது என்றுமத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.இப்பிரச்சனை தொடர்பாக, பல்வேறு எம்.பி.க்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவற்றுக்கு மத்திய சமூக நலத் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதிலளித்துள்ளார்.
“2013-2014 முதல் 2020 ஜனவரி 31 வரை 13 மாநிலங்களில் நகராட்சிகள் மற்றும் சிற்றூராட்சிகளில் கையால் கழிவகற்றும் 14 ஆயிரத்து 559 தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுதவிர, 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் ஒரு தேசியக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கடந்த மாதம் (ஜனவரி 31 வரை) 48 ஆயிரத்து 345 பேர் கையால் கழிவகற்றும் பணியாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதன்படி நாடுமுழுவதும் கையால் கழிவுகளை அகற்றும் 62 ஆயிரத்து 904 தொழிலாளர்கள் இருப்பது தெரியவந் துள்ளது. இவர்களில்- 2019ஆம் ஆண்டில் மட்டும் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது 110 பேர் உயிரிழந்துள்ளனர்.சாக்கடை சுத்தப் பணிகளின்போது உயிரிழந்த நபர்களின் மரணம் குறித்து முறையான எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், இதற்கான புள்ளிவிவரம் துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis) மூலம் பெறப்பட்டுள்ளது.
ஆணையக் குழுவின் அறிக்கைகளின்படி, கடந்த ஒவ்வொரு ஆண்டும் பாதாளச் சாக்கடையில்‘மேன் ஹோல்’ எனப்படும் ஆளிறங்கும் சாக்கடைக்குழியிலோ அல்லது கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிகளில் விஷவாயு தாக்கியோ தொடர்ந்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.2015-ல் 57 பேர் 2016-ல் 48 பேர், 2017-ல் 93 பேர்,2018-ல் 68 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன. இதன்படி ஐந்து ஆண்டுகளிலேயே 2019-இல் மட்டும்தான் மிக அதிக எண்ணிக்கையில், 110 துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த உயிரிழப்புகள் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்,அவ்வாறு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதற்கான அறிக்கைகளைச்சமர்ப்பித் துள்ளன. இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே குறிப் பிட்டுள்ளார்.