tamilnadu

img

82 பேர் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள்... தில்லி வன்முறையில் தொழில்முறை ரவுடிகளை களமிறக்கிய கொடூரம்

புதுதில்லி:
சிறுபான்மை இஸ்லாமியர்க்கு எதிராக தில்லியில் பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் முன்னின்று நடத்திய வன்முறை நாட்டையே தலைகுனிய வைத்துள்ளது.

வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்என்றும் அஞ்சப்படுகிறது. தற்போதுவரை, கொல்லப்பட்டவர்களில் 30 பேரின்உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில்  பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.தீ வைக்கப்பட்டும், ஆசிட் வீசப்பட்டும்கத்தியால் குத்தப்பட்டும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தாக்குதலாலும் இவர் கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 25 பேர்கள் வரைதுப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் என்பதும், காயம் அடைந்தவர்களை எடுத்துக் கொண்டாலும், அவர்களில், 82 பேரின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன என்பதும் காவல்துறை வட்டாரத் தகவல்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 350 துப்பாக்கிக் குண்டுகளை போலீசார் கண்டெடுத் துள்ளனர். இந்த குண்டுகள், 32 எம்.எம்.,9 எம்.எம்., .315 எம்.எம். துப்பாக்கிகளுக்கு உரியவை என்பதையும் கண்டுபிடித்துள்ள போலீசார், வன்முறைகளில் உள்ளூரைச் சேர்ந்த தொழில்முறை ரவுடிகள் பலர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்; அவர்கள் கள்ளத் துப்பாக்கிகள் மூலம்தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

திருமணமான 11 நாட்களில் பறிபோன இளைஞரின் உயிர்

தில்லியில் வன்முறை தொடர்பான கோரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தில்லி வன்முறையில் திருமணமாகி 11 நாட்களே ஆன, இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் உயிரும் பறிபோயிருப்பது, துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு தில்லியின் குரு தேஜ்பகதூர் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்பாக்ஹூசைன். இவருக்கு கடந்த 14-ஆம்தேதி காதலர் தினத்தன்றுதான் திருமணம்ஆகியுள்ளது. இந்நிலையில், வன்முறையாளர்களால் ஹூசைன் சுட்டுக் கொல் லப்பட்டுள்ளார். அவரது உடலில் ஐந்துகுண்டுகள் பாய்ந்துள்ளனர்.“இப்போது என் மருகளுக்கு நான் என்ன பதில் சொல்வது? அவளது எதிர் காலம் என்னவாகும்?” என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார், அஷ்பாக் ஹூசைனின் தாயார் ஹஸ்ரா.

அடித்துக் கொல்லப்பட்ட 60 வயது முதியவர்

 ஷிவ் விஹாரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கும் காசியாபாத்தின் லோனியைச் சேர்ந்தவர் அயூப் அன்சாரி.60 வயதான இவர், வெளியில் நடக்கும் வன்முறை காரணமாக, கடந்த சில நாட்களாக வீட்டிலேயேதான் இருந்துள்ளார். விறகு தேவைப்பட்டதால் அதனை சேகரிப்பதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வெளியே புறப்பட்டுள்ளனர். பின்னர் படுகாயங்களுடன் தான் அவரைச் சிலர் வீட்டிற்குத் தூக்கி வந்துள்ளனர். அயூப்பின் தலை, உடல் மற்றும் கால்களில் கொடுங்காயங்கள் இருந்துள்ளன. எனினும், அவருக்கு நினைவு தப்பவில்லை. 18 வயது மகன் சல்மான் அன்சாரிஉள்ளிட்ட குடும்பத்தினர் விசாரிக்கையில், சிவ் விஹாரில் ஒரு கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தி பெயரைக் கேட்டதாகவும், அயூப் அன்சாரி என்று கூறிய உடனேயே அந்தக் கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியதாகவும் அயூப் கூறியுள்ளார். தற்போது அயூப்பை அவரது குடும்பம் இழந்து நிற்கிறது.

15 வயது மகனை இழந்த ரிக்ஷா தொழிலாளி
தில்லி வன்முறையில், ரிக்ஷா தொழிலாளி ஒருவர், நித்தின் குமார் என்ற 15 வயது மகனை பறிகொடுத்திருப்பது, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.“எனது மகன் இறந்துவிட்டான். அவனுக்கு 15 வயதுதான் ஆனது. நான் ரிக்ஷா ஓட்டுகிறேன். அதன்மூலம்தான் எனது குழந்தைக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்து வந்தேன். என் இரண்டு குழந்தைகளில் ஒருவன் இப்போது இல்லை” என்று வேதனையுடன் கூறுகிறார், ராம் சுவாரத் பஸ்வான் என்ற அந்தரிக்ஷா தொழிலாளி. தனது மகனின் உடலைப் பெற முடியாமலும் கடந்த 4 நாட்களாக மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருப்பதாக அவர் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்.