புதுதில்லி:
2019-20 நிதியாண்டிற்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross domestic product - GDP) குறித்து, தரமதிப்பீட்டுநிறுவனங்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தன.‘பிட்ச்’ நிறுவனம் 4.6 சதவிகிதம், ‘மூடிஸ்’ 4.9 சதவிகிதம், ‘இந்திய ரிசர்வ்வங்கி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ ஆகியவை 5 சதவிகிதம், ‘ஆசிய வளர்ச்சிவங்கி’ மற்றும் ‘கிரிசில்’ நிறுவனங்கள் 5.1 சதவிகிதம், ‘உலக வங்கி’6 சதவிகிதம், சர்வதேச நாணய நிதியமான ‘ஐஎம்எப்’ 6.1 சதவிகிதம் என்று கணிப்புகளை வெளியிட்டிருந்தன.ஆனால், இந்த கணிப்புகள் எதையும் மத்திய பாஜக அரசு ஏற்கவில்லை. ஜிடிபி 7.5 சதவிகிதத்திற்கு குறையாது என்று மத்திய அமைச் சர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் புள்ளியியல் அலுவலகமே (Central Statistics Office - CSO) 2019-20 நிதியாண்டிற்கான ஜிடிபி, 5 சதவிகிதம் என்று கணிப்பு வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, பொருளாதார வளர்ச்சியை துல்லியமாக கணிப்பதற்குப் பயன்டும் ஜிவிஏ (Gross Value Added - GVA) மதிப்பீட்டையும் புள்ளியியல் அலுவலகம் குறைத் துள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபிதொகையில், நிறுவனங்கள் மற்றும்மக்கள் செலுத்தும் வரித் தொகைகளைக் கழித்துவிட்டால் கிடைப்பதுதான் இந்த ஜிவிஏ. அதன்படி 2018-19நிதியாண்டில் 6.6 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்த ஜிவிஏ, 2019-20 நிதியாண்டில் 4.9 சதவிகித வளர்ச்சியையே பெறும் என்று கூறப்பட்டுஙள்ளது.மேலும், இந்தியாவின் மொத்த நிலையான மூலதன உருவாக்க வளர்ச்சி முந்தைய ஆண்டில் 10 சதவிகிதமாக இருந்த நிலையில், அது 2019-20 நிதியாண்டில் வெறும் 1 சதவிகிதமாக இருக்கும். தனியார் இறுதி நுகர்வுச் செலவுவளர்ச்சி (Private Final Consumption Expenditure - PFCE)2018-19 நிதியாண்டில் 8.1 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 5.8 சதவிகிதமாக குறையும். 5.6 சதவிகிதமாக இருந்த தனிநபர் வருமான வளர்ச்சிவிகிதம், நடப்பு நிதியாண்டில் 4.3 சதவிகிதமாக இருக்கும் என்றும் புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.