புதுதில்லி:
இந்தியாவைப் பொறுத்தவரை, மாணவர்களை விட, பசுக்களுக்குத்தான் பாதுகாப்பு அதிகம் என்று பாலிவுட் நடிகை டிவிங் கிள் கண்ணா, தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.தில்லி ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறுகூறியுள்ள டிவிங்கிள் கண்ணா,“வன்முறையால் நீங்கள் மக்களை அடக்க முடியாது. இன்னும் அதிகப்போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெறும். தொடர்ந்து மக்கள் சாலைகளில் இறங்குவர்” என்றும் மோடி அரசை எச்சரித்துள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாரின் மனைவியான டிவிங்கிள்கண்ணா, பாஜக மற்றும் பிரதமர் மோடி அரசின் மீது விமர்சனங்களை துணிந்து முன்வைத்து வருபவர் ஆவார். இதனை பிரதமர் மோடியே ஒருமுறை கூறினார்.கடந்த 2016 மக்களவைத் தேர்தலின் போது நடிகர் அக்ஷய் குமார் பிரதமர் மோடியை நேர்காணல் செய்தார். அப்போது ‘ட்விட்டரில் நீங்கள் எந்தளவு மக்களைப் பின்தொடர்கிறீர்கள்?’ என மோடியிடம்அக்ஷய் குமார், கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மோடி,“நான் உங்களையும் உங்கள் மனைவி டிவிங்கிளின் ட்விட்டர்கணக்கையும் பின் தொடர்ந்து வருகிறேன். உங்கள் மனைவி பல நேரம் தன் கோபங்களை எல்லாம் என் மீது கொட்டிவிடுவதால் உங்கள் இல்லற வாழ்க்கை அமைதியாய் இருக்கும் என்றே நினைக்கிறேன்; இந்த வகையில், நான் உங்களுக்கு பயனளிக்கிறேன் அக்ஷய்” என்று சிரித்துக் கொண்டே தனது கடுப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.