புதுதில்லி:
இந்து மதப் பாரம்பரியத்தை ஒழுங்குபடுத்தப் போகிறோம் என்று, புரோகிதர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் பாடத்திட்டம் ஒன்றை கொண்டுவந்து, அதனடிப்படையில் தகுதித் தேர்வு நடத்த மோடி அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:
ஆன்மிகத்துறை செயல்பாடுகளான பூஜைகள், யாகம் போன்ற சடங்குகளில் பயன்படுத்தப்படும் மந்திரங்களை ஒழுங்குமுறைப்படுத்தி அவற்றை ஒரு பாடத்திட்டமாக்க மத்திய பாஜக அரசு விரும்புகிறது. இதற்காக இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பூஜைகள் மற்றும் சடங்கு மந்திரங்கள் கற்பிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இவர்களின் திறனைப் பரிசோதிக்க ஒன்று முதல் பத்து வரை தகுதித் தேர்வுகளும் நடத்தப்படும்.இந்த தேர்வில் வேதம் மற்றும் சாஸ்திரங்களை நேர்முகமாக அல்லது தனியாகப் பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம். பூஜை, புனஸ்காரங்களுக்கான முக்கிய மொழியாக சமஸ்கிருதம் இருப்பதால், அந்த மொழி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். கல்வி மையங்கள் எங்கு அமையும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அநேகமாக காசி அல்லது மதுராபோன்ற இடங்களில் இந்த வேதக் கல்வி மையங்கள் அமையும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த யோசனையை அமைச்சகத்திற்கு வழங்கிய காசி சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜாராம் சுக்லா, “பழங்கால சாஸ்திரிய முறைப்படி இந்தபாடத்திட்டங்கள் அமைய வேண்டும் எனஅமைச்சகத்திற்கு நான் பரிந்துரை அளித்துள் ளேன்; அத்துடன் இந்த பாடத்திட்டத்தில் வாஸ்துசாஸ்திரம், ஜோதிடம் ஆகியவையும் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளேன்; இவ்வாறு மந்திரங்களைக் கற்று வேலைவாய்ப்பு பெறுவோர், மாதம் ரூ. 50 ஆயிரம் வரை ஊதியம் பெற வேண் டும்” என்று ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.