புனே
இந்தி மொழி திரையுலகான பாலிவுட்டில் பிரபலமானவர் ஆஷா போஸ்லே. இவர் தென்னிந்திய மொழிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார். தற்போது ஆஷா போஸ்லே மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரான புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டிற்கு மாத (ஜூன்) மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 என அறிவிக்கப்பட்டு இதற்கான பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது. பில்லை கண்ட ஆஷா போஸ்லே அதிர்ச்சியடைந்து மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மகாராஷ்டிரா அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதில்," என் வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 எனவும் மே மாதம் மின் கட்டணம் ரூ.8,855.44 என பில் வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும்" என கேட்டுள்ளார். இதன்பிறகு புனே வட்டத்தை சேர்ந்த மகாடிஸ்காம் மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று மின்மீட்டரை சரி பார்த்துள்ளார். அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான் பதிவு செய்துள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2-வது முறை..
ஏற்கெனவே கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஷா போஸ்லே வீட்டில் திடிரென ஒரு மாதம் மின் கட்டணம் உயர்ந்தளவில் பில் போடப்பட்டது. பின்னர் அம்மாநில எரிசக்திதுறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே தீர்த்து வைத்தார். தற்போது 2-வது முறையாக இதே பிரச்சனை எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மின்கட்டணம் தாறுமாறாக உயர்த்தியது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.