ரம்ஜான் மாதத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நேரங்களில் மாற்றம் ஏதுமில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ரம்ஜான் மாதத்தில் அதாவது மே மாதம் 6, 12 மற்றும் 19 தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நேரங்களில் மாற்றம் செய்யக்கோரி வழக்கறிஞர்கள் முகமது நிசாமுதின் பாஷா மற்றும் ஆசாத் ஹயாத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இதுகுறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இன்று இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்குப்பதிவு நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என தெரிவித்தது. இதனால் வழக்கமாக வாக்குப்பதிவு துவங்கும் 7 மணி என்ற நேரத்தை 2 அல்லது 2.5 மணி நேரம் குறைத்து 4.30க்கும் வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.