சவுகிதார் மோடி அரசின் படுதோல்வியால் நாட்டில் கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது 85 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மோடி அரசு கடந்த 2014 தேர்தலின் போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேர்தலின் போது பாஜக கூவியது. ஆனால் மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான பொருளாதாரக்கொள்கையால் வேலைவாய்ப்பு பெருமளவு குறைந்துள்ளது. சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிலை நம்பி இருந்த முதலாளிகள் உள்ளிட்ட பலர் தங்கள் வேலையை இழந்து தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதேபோல் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உர்ஜா சங்கம் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை 10 சதவிகிதம் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். 2013-14 நிதியாண்டில் நாட்டின் எரிபொருள்தேவை 77 சதவிகிதமாக இருந்த நிலையில் 75வது சுதந்திர தின கொண்டாடப்படும் 2022ம் ஆண்டில் 67 சதவிகிதமாக குறைக்கப்படும் மேலும் இது வரும் 2030ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது கச்சா எண்ணெய் தேவைக்கு இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பது 85 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது மத்திய அரசே வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய்யின் இறக்குமதி கடந்த 2017-18ம் ஆண்டில் 82.9 சதவிகிதம் காணப்பட்ட நிலையில் தற்போது 2018-19ல் 83.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2015-16 ல் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பது 80.6 சதவிகிதமாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டில் இது 81.7 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு கடந்த 2015-16ல் 18.47 கோடி டன்னாக இருந்தது. இது அடுத்த ஆண்டில் 19.46 கோடி டன்னாகவும் பின்னர் 20.62 கோடி டன்னாகவும் உயர்ந்தது. இந்நிலையில் 2018-19ம் ஆண்டில் கச்சா எண்ணெய்க்கான தேவை 2.6 சதவிகிதம் அதிகரித்து 21.16 கோடி டன்னாக இருந்தது.
ஆனால் கடந்த 2015-16ல் 3.69 கோடி டன்னாக இருந்த உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 2016-17ல் 3.60 கோடி டன்னாக குறைந்தது. இந்த சரிவு மோடி அரசின் அலட்சியத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீடித்து 2017-18ல் 3.57 கோடி டன்னாக குறைந்தது. நடப்பு 2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் மேலும் சரிந்து 3.42 கோடி டன் அளவில் மட்டுமே உள்ளது மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சவுகிதார் மோடி தலைமையிலான அரசு கச்சா எண்ணெய் தேவையை 10 சதவிகிதம் அளவுக்கு குறைக்கும் தனது இலக்கில் படுதோல்வியையே சந்தித்துள்ளது.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலாக மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக மோடி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.