புதுதில்லி:
கொரோனா நெருக்கடியை காரணமாக வைத்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும், ஊழியர்களை பணி நீக்கம் செய்வது; அவர் களின் ஊதியத்தைக் குறைப்பது என்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ்’ தனது ஹைட்ரோகார்பன் பிரிவில் உயர் மட்ட அடுக்கில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
உணவு டெலிவரி நிறுவனமான ‘ஜொமாட்டோ’, தனது ஊழியர்களில் 13 சதவிகிதம் பேரை நீக்கப் போவதாகவும், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப் போவதாகவும் அறிவித்த நிலையில், மற்றொரு உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியும், 1100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துஅறிவித்துள்ளது. இந்த வரிசையில் ‘வீவொர்க்’ நிறுவனத்தின் இந்தியப்பிரிவும் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் ஆகும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ‘வீவொர்க்’ நிறுவனத்தில் சாஃப்ட்பேங் குழுமம் 1350 கோடிடாலர் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தை இந்தியாவில் 2020ஆம் ஆண்டிலேயே லாபகரமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கொரோனா நெருக்கடி தொழிலை பாதித்து விட்டதாக காரணம் கூறப்பட்டுள்ளது.