புதுதில்லி:
தமிழகம் உள்ளிட்ட மூன்று தென் மாநிலங்கள், கொரோனா இறப்பு விகிதத்தை தக்கவைக்க கண்காணிப்பு, தொடர்பு தடமறிதல் மற்றும் ஆரம்பகால நோயறிதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணைஅமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் தமிழகம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், பீகார், மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கொரோனாவை நிர்வகிப்ப தற்கான தயார்நிலை குறித்து தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தெலுங்கானா சுகாதார அமைச்சர் எட்டேலா ராஜேந்திரா மற்றும் கர்நாடக மருத்துவ கல்வி அமைச்சர் கே.சுதாகர் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை. ஆய்வுசெய்தனர். பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:-
கடந்த 14 நாட்களில் புதிய தொற்று எதுவும் கண்டறியப்படாத, பாதிக்கப்படாத மாவட்டங்களில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் (SARI) மற்றும் நோய் போன்ற காய்ச்சல்(ILI) ஆகியவற்றின் கண்காணிப்பை மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளோடு இணைந்து தீவிரப்படுத்தவேண்டும். கொரோனா இதுவரை சமூக பரவல் ஏற்படவில்லை.சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் குறைப்பதற்கும் அனைத்து சுகாதார அமைப்புகளிலும் தொற்று, தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (ஐபிசி) நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.கொரோனா காரணமாக எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள இதுவரை நாங்கள் தயாராக இருக்கிறோம். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சை, டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ரத்தமாற்றம்வழங்குதல், புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறப்புக்குமுந்தைய பராமரிப்பு போன்ற கொரோனா அல்லாத அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தமிழகம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 3 தென் மாநிலங்கள், கொரோனா இறப்பு விகிதத்தை தக்கவைக்க கண்காணிப்பு, தொடர்பு தடமறிதல் மற்றும் ஆரம்பகால நோயறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஹர்ஷ்வர்தன் கூறினார். சனிக்கிழமை அவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் தொடர்பாக மோசமான நிலையை எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை.நாட்டில் இறப்பு விகிதம் தொடர்ந்து 3.3 சதவீதமாகவும் குணமடைவோர் எண்ணிக்கை 29.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 7, 645 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ளன. 69 லட்சம் என் -95 முகக்கவசங்களை பல்வேறு மாநிலஅரசுகளுக்கு விநியோகித்துள்ளோம். மொத்தம் 32.76 லட்சம்பிபிஇக்கள் மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இப்போது நாட்டில் 453 ஆய்வகங்கள் உள்ளன. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நோயாளிகளில் 0.38 சதவீதம் பேர் வென்டிலேட்டர் பாதுகாப்பில் உள்ளனர்.1.88 சதவீதம் ஆக்ஸிஜன் ஆதரவு தேவையில் உள்ளனர். 2.21சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றார்.