லாகூர்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் மார்ச் 2-ஆம் வாரத்திலிருந்து கொரோனா தனது ஆட்டத்தை துவங்கியது. ஏப்ரல் 2-ஆம் வாரம் வரை பெரியளவு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து தனது எழுச்சியை தொடங்கிய கொரோனா இன்று வரை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாடு ஊரடங்குடன் பல்வேறு வகையில் போராடி பலனளிக்கவில்லை. இந்தியாவை போல கட்டுப்பாடு பகுதியில் மற்றும் ஊரடங்கை அமல்படுத்தி மற்ற இடங்களில் இயல்பு நிலையை கொண்டு வந்தது. ஊரடங்கு தளர்த்திய பின்பு இந்தியாவை போல கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக அங்கு ஜூன் மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் புதிய வேகத்தை கையிலெடுத்தது. தினமும் 5000-க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகளால் குறுகிய காலத்தில் பாகிஸ்தான் அதிக பாதிப்பைச் சந்தித்து. மேலும் கொரோனா பாதிப்புக்கான அட்டவணையில் 14 இடத்துக்கு சென்றது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அந்நாட்டில் கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. ஜூன் 21-ஆம் தேதி அன்று 4,951 பேரும், நேற்று 4,471 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கையில் பலத்த மாற்றம் ஏற்பட்டு 3,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் இறங்கு வரிசையில் கொரோனா பாதிப்பு நகர்வதால் அந்நாட்டில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 695 பேர் (இன்று மட்டும் 105 பேர்) பலியாகியுள்ள நிலையில், 73 ஆயிரத்து 471 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.