தில்லி
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் உள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் முதன்முறையாக இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 40,243 பேர் புதிய நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியது.
மேலும் 675 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 27 ஆயிரத்து 500-யை கடந்தது. 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து விடுபட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது.
குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் உலகின் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தை பிடித்தது. முதலிடத்தில் அமெரிக்காவும் (65,279), மூன்றாம் இடத்தில் பிரேசிலும் (24,650) உள்ளது. நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் இதே நிலையில் தொடர்ந்தால், உலகின் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா விரைவில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறும். பிரேசிலில் கடந்த ஒருவாரமாக கொரோனா பரவல் இறங்கு வரிசையில் உள்ளது.