புதுதில்லி:
சட்ட விரோத பணபரிமாற்ற மோசடி யில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரசின் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 16 கோடியே 38 லட்சம் மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவால் 1938-ம் ஆண்டில் ‘நேஷனல் ஹெரால்டு’ ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. பத்திரிகையை அச்சிடுவதற்காக ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’என்று துணை நிறுவனமும் துவங்கப் பட்டது.‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் 9 மாடி கட்டடம் உள்ளது.இந்நிலையில், அரியானாவில் இந்த நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கி அதை வங்கியில் அடமானம் வைத்து பெற்ற தொகையிலேயே இந்தகட்டடம் கட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
அதனடிப்படையில்- பாந்த்ராவிலுள்ள 9 மாடி கட்டடத்தில் ரூ. 16 கோடியே 38 லட்சம் மதிப்பிலான ஒரு பகுதியை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.ரூ. 90 கோடியே 25 லட்சம் வட்டியில்லா கடன் கொடுத்தற்காக, ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ரூ. 2ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக் களை சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள‘யங் இந்தியா’ நிறுவனம் அபகரித்து விட்டதாக, பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.