1905ஆம் ஆண்டு உருவான வங்கப்பிரிவினையால் நாட்டில், குறிப்பாக வங்காளத்தில் பயங்கரவாத இயக்கம் தலைதூக்கியதைக் கண்டோம். அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே போய் 1920ஆம் ஆண்டுகளின் கடைசியில் மேலும் தீவிரமானது. 1928ஆம் ஆண்டில் இந்தியர்கள் சுதந்திரம் பெற தகுதியானவர்கள் தானா என்று பரிசீலனை செய்யும்படி சைமன் குழு என்ற ஒரு குழுவை ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்பியது. இதை தேசிய காங்கிரஸ் இயக்கம் கடுமையாக எதிர்த்தது. நாடு முழுவதும் சைமன் குழு சென்ற இடங்களில் எல்லாம் பெரும் ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் ஹர்த்தால்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வங்காளத்தில் பயங்கரவாத இயக்கம் மீண்டும் தலைதூக்கியது. அங்குள்ள சிட்டகாங் நகரில் இருந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் ராணுவக்கிடங்கை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். அதில் பங்குபெற்ற ஆனந்தசிங், கணேஷ் கோஷ், சுபோத்ராய் போன்றோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்தமான் தீவுச்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அடைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மற்றவர்களும் அங்கே கொண்டு செல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைதான ஒரே பெண் கல்பனா தத்திற்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் அது உயர்நீதிமன்றத்தால் ஆண்டு சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டு கல்கத்தா சிறையில், அடைக்கப்பட்டார்.
இதேபோன்று ஏராளமான அரசியல் கைதிகள், குறிப்பாக பயங்கரவாதப் புரட்சியாளர்கள் பல மாநிலங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் மிகக்கொடிய சித்ரவதைக்கும் வேதனைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். எனவே அனைவரும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடினர். இதில் சிலர் இறந்தனர். அந்தப்போராட்டம் இந்திய நாட்டையே உலுக்கியது. அதன்பின்னர்தான் ஆங்கிலேய அரசாங்கம் அவர்களுக்கு சில சலுகைகளைக் கொடுத்தது. அவற்றில் ஒன்று அவர்கள் விரும்பும் பத்திரிகைகளை பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்பதாகும்.
இவ்வாறு அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் மார்க்சியம் குறித்து படித்தவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் நாராயண் ராய் என்பவர். அவருடன் சேர்ந்து சதீஸ் பக்ராசி, நிரஞ்சன் சென் ஆகிய மார்க்சியம் அறிந்தவர்களும் இருந்தனர். இந்த மூவரும் கல்கத்தாவின் அலிப்பூர் சிறையில் இருந்தபொழுது அங்கிருந்த கம்யூனிஸ்டுகளுடன் தொடர்புகொண்டு மார்க்சியம் குறித்து தெரிந்துகொண்டவர்கள் ஆவர். ஆங்கிலேய அரசாங்கம் டாக்டர் நாராயண் ராயையும் நிரஞ்சன் சென்னையும் சத்தீஸ் பக்ராசியையும் அந்தமானுக்கு மாற்ற முடிவு செய்தது. இவர்கள் மூவரும் அந்தச்சிறைக்குச் சென்றபின் மார்க்சியம் குறித்து பரவச் செய்வதற்காக கிடைத்த மார்க்சிய நூல்கள் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த மூவரும் அந்தமான் சிறைக்கு வந்தபொழுது அங்கே ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த பகத்சிங்கின் சக தோழர்களும் லாகூர் சதி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுமான பூதகேஷ்வர் தத், விஜய் சின்ஹா, சிவவர்மா, கமல்நாத் திவாரி, ஜெய்தேவ் கபூர், டாக்டர் கயா பிரசாத் போன்றோர் அனைவரும் ‘சி’ வகுப்புக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது இவர்களும் அங்கிருந்த மற்ற கைதிகளும் சேர்ந்துதான் உரிமைகள் கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி பல உரிமைகளை அடைந்தனர்.
அதன்படி, பத்திரிகைகள், புத்தகங்களை அரசாங்கமே கொடுக்கும்; கைதிகள் சொந்தப் பணத்தில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். கைதிகள் ஒன்றாய் கூடி பத்திரிகைகள், புத்தகங்களைப் படிக்கவோ, விவாதிக்கவோ செய்யலாம். குடும்பத்தினருடன் கடிதப்போக்குவரத்து நடத்துவதில் தடையில்லை. வேலை நேரம் குறைக்கப்பட்டது. பெயரளவு சட்டப்படி எளிமையான வேலை கொடுக்கப்பட்டது. விளையாட்டு வசதிகள் தரப்பட்டன. உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இவைகள் தவிர, வேறு பல சலுகைகளும் தரப்பட்டன. இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டதன் விளைவாக அரசியல் கைதிகள் அனைவரும் ஒன்றுகூட முடிந்தது. கயிறு திரித்தல், கல் உடைத்தல் போன்ற வேலைகளுக்குப் பதிலாக சிறைக்குள்ளிருந்த அச்சகத்தில் புத்தகம் பைண்டிங் செய்யும் வேலை போன்றவை அரசியல் கைதிகளுக்குத் தரப்பட்டன. காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் அச்சக வேலை பகல் 12 மணிக்கு முடியும். அதன்பின் அனைவரும் குளித்து மதிய உணவு உண்பார்கள். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு புத்தகங்கள் படித்தல், விவாதித்தல், மாலையில் விளையாட்டு என்று நாட்கள் செல்ல ஆரம்பித்தன.
இந்தத் தண்டனை கைதிகள் தங்களுக்கென்று பத்திரிகைகள் வாங்கிக்கொள்ள கல்வி வாரியம் ஒன்றினை அமைத்தார்கள். லண்டனிலிருந்து வெளியாகும் லேபர் இண்டர்நேஷனல் அபேர்ஸ், வேர்ல்டு ரெவ்யூ ஆப் ரெவ்யூஸ், லண்டன் டைம்ஸ், மான் செஸ்டர் கார்டியன் வார இதழ், நியுயார்க் டைம்ஸ் வார இதழ், நியூ ஸ்டேட்ஸ்மன், இந்தியன் ரெவ்யூ, மைசூர் எகனாமிக் ஜெர்னல், இந்துஸ்தான் ரெவ்யூ, லேபர் கெஜட், மும்பை, பாரத், இந்தி வார இதழ் போன்றவைகளை வாங்கிக்கொண்டனர். மேலும் பின்வரும் புத்தகங்களையும், கல்வி வாரியம் பணம் கொடுத்து வாங்கச் செய்தது. கார்னர் எழுதிய ‘ஸ்பெயின் எழுச்சி’ கொள்கிறது. பிரிட்டோ எழுதிய ‘இன்றைய ஸ்பெயின்’ போன்றவற்றோடு ‘ஐரோப்பா மீது ஹிட்லர்’, ‘பாசிச அச்சுறுத்தல்’, ‘அதிகாரத்திற்கான போராட்டம்’, ‘முதலாளித்துவ நெருக்கடியின் தன்மை’, ‘சீனம் எழுச்சி கொள்கிறது’ ‘நவீன சீனத்தின் அடிப்படைகள்’ ‘நெருக்கடியில் ஜப்பான்’ ‘தூர கிழக்கின் பிரச்சனைகள்’ ‘நவீன காலங்களில் தூர கிழக்கின் வரலாறு’ ‘இங்கிலாந்தும் பாலஸ்தீனமும்’ ‘பால்கன் நாடுகள்’ ‘ரூஸ்வெல்ட் வெற்றி பெறுவாரா’ ‘நடுத்தர வர்க்கத்தின் விதி’ ‘இந்தியப் பொருளாதாரம்’ ‘இந்தியாவின் நிலப்பிரச்சனைகள், சோசலிசம் எதற்காக’ ‘இந்திய நெருக்கடி’ ‘இந்தியாவில் சம்மேளனம்’ போன்ற ஏராளமான ஆங்கில நூல்கள் வாங்கப்பட்டன.
அரசியல் கைதிகளுக்காக பொதுவான வகுப்புகள் நடத்தப்பட்டுவந்த நேரத்திலேயே டாக்டர் நாராயண் ராய் அவர்களிடையே மார்க்சியத்தைப் பரப்பும் பணியையும் துவக்கினார். தினமும் மார்க்சிய வகுப்புகள் நடத்தப்பட்டன. முதலில் நிரஞ்சன் சென், சத்தீஸ் பக்ராசி, கோபால் ஆச்சாரியா, பங்கேஸ்வரராய், ஹரிகிருஷ்ண கோனார் மற்றும் சுதான்சு தாஸ் குப்தா ஆகிய ஏழு பேர் இதில் பங்கேற்றனர். நாராயண் ராய் அவர்களுக்கு முதலில் மார்க்சியத்தை விரிவாக விளக்கினார். இவர்கள் தினமும் பகல் ஒருமணிக்குத் துவங்கி மாலை வரை மார்க்சிய உரைகளைக் கேட்பார்கள். இரவில் தனித்தனியாக மார்க்சிய நூல்களைப் படிப்பார்கள்.