tamilnadu

img

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவான ஆண்டு ஒரு தெளிவான விளக்கம் - என்.ராமகிருஷ்ணன்

“புரட்சிகர இயக்கத்துக்கு சர்வதேச கட்சிக் கட்டுப்பாடு அவசியம் என்பதை இக்குழு ஒப்புக்கொள்வதால், எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும், இந்தியாவில் அதற்கு இன்னும் வேர்கள் இல்லை என்றாலும் அதற்கு ஒரு தற்காலிகத் தன்மை கொடுத்தாலும் இக்குழு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் என்றும் கருதலாம்”  இக்குழுவை கட்சி என்று அங்கீகரிக்குமாறும், அப்பொழுது துவங்கியிருந்த மூன்றாவது காங்கிரசில் ஆலோசனை உரிமையுடன் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் இந்தியக் கமிஷன் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு சிபாரிசு செய்தது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்றாவது காங்கிரசின் பிரதிநிதிகள் பட்டியலில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாண்டு அக்டோபர் 17ஆம் தேதியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டாக அறிவித்து சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரவைகள், பொதுக்கூட்டங்கள், கொடியேற்றுதல் மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேறொரு கருத்தைக் கூறி வருகிறது. அதாவது ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவுப்படி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புதினம் டிசம்பர் 26, 1925 என்றும், அதுதான் சரியான தினம் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா 2025ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதிதான் என்றும் கூறி வருகிறது. 

ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவு உண்மைதான். அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதற்கு தோழர் எம். பசவபுன்னையா தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் அஜய் கோஷ், செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பி.டி.ரணதிவே, பி.சி.ஜோஷி, இசட். ஏ.அகமது, எஸ்.ஏ.டாங்கே மற்றும் ஏ.கே.கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டமானது கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட தினம் 1925 டிசம்பர் 26ஆம் தேதி என்று முடிவு செய்தது. டிசம்பர் 25ஆம் தேதிதான் கான்பூரில் முதல் கம்யூனிஸ்ட் மாநாடு துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் டிசம்பர் 26ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. 

இந்த விபரங்கள் அனைத்தும் சரியானதே. 

ஆனால் 1964ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின் 1970ஆம் ஆண்டுகளில், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூன்று முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் முசாபர் அகமது அவர்கள், கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கு ஒரு முக்கிய அம்சத்தை சுட்டிக்காட்டினார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை என்பது 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் வரலாறு தொடங்குகிறது என்றும் அதைத் தொடர்ந்து  1924ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் சதிவழக்குகள், போராட்டங்கள், சென்னை, பம்பாய், கல்கத்தா, பெஷாவர் போன்ற நகரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு பத்திரிகைகள் நடத்தி மக்களைத் திரட்டி நடத்திய போராட்டங்கள், நடத்திய இயக்கங்கள், நடத்தப்பட்ட அரசியல் இயக்கங்கள், சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கேற்பு, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பங்கேற்பு ஆகியவை இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒதுக்கப்பட்டு 1925லிருந்து தான் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது என்பது தவறானது. அது 1918 முதல் 1924 வரை நடத்தப்பட்ட இயக்கங்களுக்கு அநீதி செய்வதாகும் என்று முசாபர் அகமது எடுத்துரைத்தார். அவர் கூறியதை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கவனமாக பரிசீலித்தது. அது 1920 முதல் பரிசீலித்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை என்பது 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்டது. எம்.என்.ராய், அவரின் துணைவியார் எவ்லின் டிரண்ட்ராய், அபனி முகர்ஜி, அவரின் துணைவியார் ரோஸா பிட்டிங்காப், முகமது அலி, முகமது ஷாபிக் சித்திக்கு, எம்.பி.டி.ஆச்சார்யா ஆகிய ஏழு பேரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. முகமது ஷாபிக் அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக்குழு லெனின் தலைமை தாங்கிய மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் அனுமதியோடு உருவாக்கப்பட்டது. இதை கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைக்க கம்யூனிஸ்ட் அகிலத்தின் உட்குழு 1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி எம்.யூ.ரூட்கர்ஸ் என்னும் பெயருடைய டச்சுக் கம்யூனிஸ்ட் தலைமையில் இந்தியக் கமிஷன் (குழு) ஒன்றை நியமித்தது. அது எம்.என்.ராயின் குழுவைப் பற்றி ஜூன் 26ஆம் தேதி பின்வரும் மதிப்பீட்டைச் செய்தது: 

“புரட்சிகர இயக்கத்துக்கு சர்வதேச கட்சிக் கட்டுப்பாடு அவசியம் என்பதை இக்குழு ஒப்புக் கொள்வதால், எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும், இந்தியாவில் அதற்கு இன்னும் வேர்கள் இல்லை என்றாலும் அதற்கு ஒரு தற்காலிகத் தன்மை கொடுத்தாலும் இக்குழு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் என்றும் கருதலாம்” (Indian Commission to the Small Bureau of the Communist International) 

இக்குழுவை கட்சி என்று அங்கீகரிக்குமாறும், அப்பொழுது துவங்கியிருந்த மூன்றாவது காங்கிரசில் ஆலோசனை உரிமையுடன் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் இந்தியக் கமிஷன் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு சிபாரிசு செய்தது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்றாவது காங்கிரசின் பிரதிநிதிகள் பட்டியலில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. (கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது உலக காங்கிரஸ், சுருக்கெழுத்து அறிக்கை, 1922). இதற்கு முந்தைய குழுக்களின் பட்டியலில் இந்தியக் கம்யூனிஸ்ட் குழுக்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. (எம்.ஆர்.பேர்சிட்ஸ், ‘சோவியத் நாட்டில் இந்தியப் புரட்சி வீரர்கள்’- இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாகிக் கொண்டிருந்த கட்டம் என்ற நூலில்)

கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொறுப்பை எம்.என்.ராய்க்கு கொடுத்தது. 

லெனின் இந்தியா மீது மிகுந்த கவனம் செலுத்தினார். இந்தியாவைச் சேர்ந்த எம்.என்.ராய், எம்.பி.டி.ஆச்சார்யா, பூபேந்திரநாத் தத்தா, ராஜா பிரதாப் சிங் போன்றோரை சந்தித்துப் பேசினார். எம்.என்.ராய், லெனினை பலமுறை சந்தித்து விவாதித்திருக்கிறார். ‘லெனின் இந்தியாவைப் பற்றி விசேஷமான அக்கறை காட்டினார். அவர் 1921 நவம்பர் 14ஆம் தேதியன்று சோவியத் கட்சி ஊழியருக்கு எழுதிய குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

‘‘இந்தியத் தோழர்களின் நூல்களை அதிகமாக வெளியிடுங்கள். இந்தியாவையும், அதன் புரட்சிகர இயக்கத்தையும் பற்றி அதிகமான விபரங்களை சேகரிக்கும்படி அது அவர்களை ஊக்குவிக்கும்.” 

- நாளை தொடரும்