tamilnadu

img

வேலையின்மையால் அவதிப்படும் கிறிஸ்தவ ஆண்கள்... கிராமப்புற சீக்கியப்  பெண்களும் பாதிப்பு

புதுதில்லி:
நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கையில், கிறிஸ்தவ ஆண்களே அதிகம் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தெரிவித்துள்ளார்.

சச்சார் குழு ஆய்வுக்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த தரவுகளில் சிறுபான்மையினரின் நிலைமை குறித்து தகவல் எதுவும் பதிவாகியிருக்கிறதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. 
இதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதிலளித்துள்ளார்.அதில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களிடம் வேலையின்மை ஏற்படுத்திய தாக்கம் குறித்து, 2017-18ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் அளித்துள்ளதாகவும், அதில், நகர்ப்புற கிறிஸ்தவ ஆண்களிடம் 8.8 சதவிகிதமும் கிராமப்புறங்களில் வசிக்கும் கிறிஸ்தவர்களிடம் 6.9 சதவிகிதமும் வேலைவாய்ப்பின்மை நிலவி வருவதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதேபோல, கிராமப்புறங்களைப் பொறுத்தவரை கிறிஸ்தவர், முஸ்லிம் பெண்களைக் காட்டிலும், சீக்கியப் பெண்கள் அதிகளவில் வேலையின்மையால் அவதிப்படுவதாகவும் நக்வி குறிப்பிட்டுள்ளார். “நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையானது இந்துப் பெண்களிடம் 10 சதவிகிதம் என்ற அளவிலும், முஸ்லிம் பெண்களிடம் 14.5 சதவிகிதம் என்ற அளவிலும், கிறிஸ்தவப் பெண்களிடம் 15.6 சதவிகிதம் என்ற அளவிலும் உள்ளது. ஆனால், நகர்ப்புற சீக்கியப் பெண்களின் வேலைவாய்ப்பின்மை 16.9 சதவிகிதம் என்ற அளவிற்கு உள்ளது. இதுவே, கிராமப்புறங்களைப் பொறுத்தவரை இந்துப் பெண்களிடம் 3.5 சதவிகிதம், முஸ்லிம் பெண்கள் மற்றும் சீக்கியப் பெண்களிடம் தலா 5.7 சதவிகிதம் என்ற அளவிலும் வேலையின்மை உள்ளது. கிராமப்புற கிறிஸ்தவப் பெண்களின் வேலைவாய்ப்பின்மை 8.8 சதவிகிதம் என்ற அளவிற்கு உள்ளது.ஆண்களின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சனையானது கிராமப்புறங்களைப் பொறுத்தவரை, இந்து மதத்தவர்களிடம் 5.7 சதவிகிதம், முஸ்லிம் மதத்தவர்களிடம் 6.7 சதவிகிதம், சீக்கிய மதத்தவர்களிடம் 6.4 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. நகர்ப்புறங்களில், இந்து ஆண்களின் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதம், முஸ்லிம் ஆண்களின் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவிகிதம், சீக்கிய ஆண்களின் வேலைவாய்ப்பின்மை 7.2 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது” என்று நக்வி விளக்கம் அளித்துள்ளார்.