சாதிய அவமானமும், வன்கொடுமையும் தொடர்கிறது
உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை
புதுதில்லி, அக். 2 - சமத்துவத்திற்கான தலித் மக்களின் போராட்டம் நாட்டில் இன்னும் ஓயவில்லை; தீண்டாமை, வன்கொடுமைகளால் தலித் மக்கள் துயரத்தை அனுபவித்து வருகின்றனர் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன், இச்சட்டத்தில், முன் ஜாமீன் கிடையாது என்ற பிரிவையும் நீக்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வன்கொடுமை சட்டத்தின் நியாயமான பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், அப்போதே கடும் அதிருப்தி தெரிவித்தனர். இடதுசாரி இயக்கங்களும், தலித் இயக்கங்களும் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்களில் 10 பேர் உயிரிழந்த சோகமும் நடந்தது. இதுபோன்ற தொடர் அழுத்தங்களால், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 9-ஆம் தேதி சட்டத்திருத்தம் ஒன்றையும் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த சீராய்வு மனு மீது, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா மற்றும் பி.ஆர். கவே ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, “எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக, கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு அரசியல் சாசனத்தின் நோக்கத்துக்கு எதிரானது” என்றும் “எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என்பதால் அந்த தீர்ப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது” என்றும் அறிவித்தனர்.
மேலும், அரசியலைப்புச் சட்டம் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு அரசமைப்புப் பிரிவு 15-இன் கீழ் முழுமையான பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும், ஆனால், நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, எஸ்.சி., எஸ்.டி., மக்களை அரசால் பாதுகாக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், “தலித் மக்கள் இன்றும் பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; அவர்கள் மீதான வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன; சமூகப் புறக்கணிப்பையும் தலித் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று வேதனை தெரிவித்தனர். “மனிதத் தவறுகளால், சில இடங்களில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக, ஒட்டுமொத்தமாகவே அரசியல் சாசனத்துக்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினர்.