காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கியவுடன்; இனி அழகிய காஷ்மீர் பெண்களை யார் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். யாருக்கு வேண்டும் என சங்பரிவார் கும்பல்கள் ஏலம்விடுகின்றன. இவர்கள் எவ்வளவு குரூர மனம் கொண்டவர்களாக இருக்க முடியும். காஷ்மீர் பெண்கள் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்வதை யாரும் இங்கு எதிர்க்க போவதில்லை. அப்படி இதுவரை காஷ்மீரை தவிர்த்து மற்றவர்களை காஷ்மீர் பெண்கள் திருமணம் செய்து கொண்டதில்லையா.. ? செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே போன்ற வன்மத்துடன் மாற்று மதத்தவர் நம் பெண்களை பேசினால், இதே சங்பரிவார் கும்பல் இந்நேரம் என்ன செய்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. இதேபோன்று காஷ்மீர் ஆண்களுக்கும் தங்கள் வீட்டு பெண்களை இனி திருமணம் செய்து கொடுக்கலாம் என கூறுவார்களா? ஆனால் பெண்களை மட்டும் மையப்படுத்தி பேசுவதிலிருந்து இவர்களின் மநுதர்ம சித்தாந்தமே முன்நிறுத்தப்படுவது தெளிவாகிறது. இதுபோன்று வன்ம பேச்சுகள் எதுவுமின்றி நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது சங்கபரிவார் கும்பல் பெண்களை குறிவைத்து நடத்திய தாக்குதல்களை நினைத்தாலே இன்றும் குலை நடுங்குகிறது.
அவ்வளவு ஏன்... நாம் எல்லாரும் இந்துக்கள்தான்.. ஏன் இந்துக்கள் ஒரு சாதியை விட்டு மற்ற சாதியில் திருமணம் செய்யக்கூடாது. இன்னும் சாதியில் ஏற்ற தாழ்வு இருக்க வேண்டும் என மநுநீதியை வலியுறுத்துபவர்கள்தானே இந்த சங்பரிவார கும்பல்... சாதிய கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தோடுதானே சாதிய ஆணவப்படுகொலைகள் அரங்கேற்றப்படுகின்றன.
ஆணாதிக்கம் என்பது மாற்று மதத்தவர் மீது மட்டும் பாய்வதில்லை. சொந்த மதத்திற்குள் மட்டுமல்ல குடும்பத்திற்குள்ளும் இருக்கிறது என்பதைத்தானே அவ்வப்போது நடைபெறும் ஆணவப்படுகொலைகள் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த அழுக்கடைந்த அறுவறுப்பான சித்தாந்தத்தையும், சிந்தனையையும் நிலைநிறுத்தும் சக்திகள் இன்று வலுப்பெற்றிருப்பது பெண் சமுதாயத்திற்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய அபாயம். அவமானம். இந்திய சமூகத்திற்கு நல்லதல்ல.
சொந்த வீட்டிற்குள் இருப்பவர்கள் சாதி மாறி திருமணம் செய்வதையே ஏற்றுக்கொள்ளாத இந்த மதவெறியர்கள்தான் காஷ்மீர் சென்று மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்களை இன்று திருமணம் முடிப்போம் என்று கூச்சலிடுகின்றனர். இதன் உண்மையான இலக்கு திருமணம் செய்வதில்லை வன்புணர்வு செய்வதே ஆகும். இன்று காஷ்மீர் பெண்கள்.. நாளை தமிழக பெண்களாக கூட இருக்கலாம் எச்சரிக்கை..
ஏனென்றால் வரலாறு நெடுகிலும் ஒரு இனத்தை அழிக்க முற்படும் போது திட்டமிட்டு அங்கிருக்கும் பெண்கள் அடக்குவதையும், பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாக்குவதையுமே முதல் பணியாக ஆணாதிக்க சமூகம் நிகழ்த்திக்காட்டி வந்திருக்கிறது. இன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலை தளங்களில் இந்துத்துவா அமைப்பினர் காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்யாலாம் என்று கூச்சலிடுவதும் இதன் தொடர்ச்சியே. இந்த எதிர்வினை 21ம் நூற்றாண்டிலும் பெண்களை சக மனுஷியாக எல்லா உரிமைகளும் உணர்வுகளும் கொண்ட ஜீவனாக பார்க்க மறுக்கின்றனர் என்பதையே காட்டுகிறது. ஆனால் இந்துத்துவா அமைப்புகள் கடைகளில் சென்று மிட்டாய் வாங்குவது போல் காஷ்மீர் பெண்களை வாங்கலாம் என்று கொக்கரிக்கின்றனர். இந்த குரூரத்தை ஏதோ வேலை இல்லாத நபர்கள் சமூகவலைதளங்களில் மட்டும் பேசுகிறார்கள் என்று புறந்தள்ளி விடமுடியவில்லை. அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டா, அம்மாநில அமைச்சர் ஓ.பி தன்கர், உத்தரபிரதேச எம்எல்ஏ விக்ரம் சைனி என வரிசையா அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கின்றனர்.
பாஜக சில நாட்களுக்கு முன் தான் முஸ்லீம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்று முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றினர். ஆனால் காஷ்மீர் பெண்களின் குறித்த இவர்களது இந்த வன்மம் நிறைந்த வார்த்தைகள் பாஜகவின் போலி முகத்திரையை கிழித்து எறிந்துள்ளது. மோடி அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 36 மசோதாக்களை நிறைவேற்றிய நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இன்னும் சொல்லப்போனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு குறித்து மட்டும் வாய்திறக்காததன் அர்த்தம் இப்போது அம்பலப்பட்டுள்ளது. சங்பரிவார அமைப்புகள் எப்போதும் பெண்களுக்கு நியாயம் செய்யப்போவதில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
காஷ்மீர் முழுவதும் இன்று திறந்த வெளி சிறையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கிருக்கும் பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கே உயிரை பணயம் வைத்து போராடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். பெண்கள் குழந்தைகள் என பொதுமக்கள் கொத்து கொத்தாக பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அவர்களின் உணர்வுகளில் விளையாடும் விபரீதத்தில் பாஜக கும்பல் இறங்கியிருப்பது எவ்வளவு குரூரமானது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்தால் பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்படும் என்று சங்பரிவார அமைப்புகள் வன்மத்துடன் போலியான கருத்தை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்குவதற்கு முன்பே வெளிமாநிலத்தவரை மணக்கும் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற முழு அமர்வு உறுதி செய்துள்ளது. கடந்த 2002 புகழ் பெற்ற சுசீலா சாஹ்னி எதிர் ஜம்மு காஷ்மீர் அரசு வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை மூடி மறைத்து காஷ்மீர் மக்களின் அனைத்து வாழ்வாதார உரிமைகளையும் பறித்து கையறுநிலையில் இருக்கும் அவர்களிடமிருந்து பெண்களை அபகரித்து வன்மத்தில் ஈடுபட சங்பரிவார குழுக்கள் வெறிக்கூச்சலிடுகின்றனர். இந்த கூச்சல் காஷ்மீர் மக்களை இந்தியாவுடன் இணைப்பதற்கு பதிலாக மேலும் பிரிவினையே அதிகரிக்கும். சாதி மத வேறுபாடின்றி இந்தியர்கள் அனைவரும் இணைந்து முதலில் தலாக் செய்ய வேண்டியது சங்பரிவார் கும்பலதைத்தான்!
-எம்.பாண்டீஸ்வரி.