சென்னை:
மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சித் தலைவரை மறைமுகமாக தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வாயன்று(நவ.19)அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கு அவசரசட்டம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், 15 மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்ய இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மாநகராட்சி மேயர்களை நேரடியாக, மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறையே இருந்து வருகிறது. இந்தமுறையை மாற்றி, மாமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வுசெய்யும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர உள்ளது.இதுபோன்ற முறையில், மேயர் பதவிக்கு நபர்களைத் தேர்வு செய்தால் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் கடத்தல்,ணம் என பல்வேறு கசப்பான அனுபவங்களை பார்த்துதான் மாற்றத்தை கொண்டு வந்தனர். எனவே, மாமன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக மேயரை தேர்வு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். மக்களே நேரடியாக மேயரை தேர்வு செய்யும் பழைய முறையையே வேண்டும் என்பதே அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் ஏகோபித்த கருத்தாகும். ஆனால்,இதில் மாற்றத்தை கொண்டு வர எடப்பாடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.