பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயங்கிடும் எட்டு சங்கங்களும், தங்கள் கோரிக்கைகளை செட்டில்மெண்ட் செய்ய வலியுறுத்தியும், மேலும் மத்தியத் தொழிற்சங்கள் அறிவித்துள்ள 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நவம்பர் 26 அன்று நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் அபிமன்யு, என்எப்டியி பொதுச் செயலாளர் சி.எஸ். சிங் உட்பட எட்டு சங்கங்களின் நிர்வாகிகளும் கையொப்பமிட்டு வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புதுப்பிப்பது என்பது இப்போதும் ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கிறது. ஏனெனில் அரசாங்கம் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு எடுக்காதது மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைவரிசையை அளிப்பதற்குப் பல்வேறுவிதமான தடைக்கற்களையும் போட்டிருக்கிறது. இதர டெலிகாம் நிறுவனங்களுக்கு அளித்துள்ள சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்க மறுக்கிறது. இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நின்றுகொண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிராக சதி செய்துகொண்டிருக்கிறது.
மத்திய அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஒரு சூழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே இவற்றைச் செய்துகொண்டிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மத்திய அரசாங்கம் ரயில்வேயை, பாதுகாப்புத்துறை துப்பாக்கித் தொழிற்சாலைகளை, பிபிசிஎல் நிறுவனத்தை, பொதுத்துறை வங்கிகளை, எல்ஐசி-யை, நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட அதிவேகமாக நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் முடிவுகளை மேலேகுறிப்பிட்டுள்ள பிஎஸ்என்ல் நிறுவனத்தின்கீழ் செயல்படும் எட்டு சங்கங்களும் கடுமையாக எதிர்க்கிறோம். மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள ஏழு அம்சக் கோரிக்கைகளுடன் நாங்களும் எங்களை இணைத்துக்கொள்கிறோம்.
இத்துடன் எங்கள் சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை செட்டில்மெண்ட் செய்வதற்காகவும், மேலும் மத்தியத் தொழிற்சங்கங்களின் 7 அம்சக் கோரிகைககளை வலியுறுத்தியும் நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தத்தில் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம்.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்ய வேண்டிய கோரிக்கைகள்:
1. 4ஜி சேவையை பிஎஸ்என்ல் நிறுவனத்திற்கு உடனடியாக வழங்கு. தனியார் நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் பாகுபாடு காட்டாதே.
2. மூன்றுவாது ஊதியத் திருத்தத்தை 1.1.2017 முதல் செட்டில்மெண்ட் செய்திடு.
3. ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை நிறுத்து. வகைதொகையின்றி அவுட்சோர்சிங் விடுவதை நிறுத்து. பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொள். அவர்களின் ஊதிய நிலுவைகளை வழங்கிடு.
4. 1.1.2017 முதல் ஓய்வூதியத்தைத் திருத்தம் செய்து செட்டில்மெண்ட் செய்திடு.
5. அதிகாரிகள் அல்லாதவர்களுக்கு புதிய பதவி உயர்வுக் கொள்கையை அமல்படுத்து.
6. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது ரொக்கம் எதுவும் அளிக்காது சிகிச்சை செய்வதை உத்தரவாதப்படுத்து. அஞ்சல் துறையில் அளித்திருப்பதுபோல கோவிட்.19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்க இழப்பீடு வழங்கிடு.
7. அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு குரூப் டெர்ம் இன்சூரன்ஸ் அமல்படுத்து.
8. நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதியப் பயன்பாடகளை அமல்படுத்து.
9. கேசுவல் தொழிலாளர் ஊதியங்கள் திருத்தத்தை அமல்படுத்து.
இத்துடன் மத்தியத் தொழிற்சங்கங்களின் ஏழு அம்சக் கோரிகைகளையும் நிறைவேற்று.
இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.