புதுச்சேரி:
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்களன்று (ஜூலை 20) பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர், கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நவம்பர் 15-ந்தேதி முதல் காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து. அனைத்து கல்லூரி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆளுநர் வரவில்லை
சட்டப்பேரவைக்குக் கிரண்பேடி வராததால் ஆளுநர் உரையின்றி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த மார்ச் 30-ம் தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 42 கோடிக்கு இடைக் கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டிற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. இதற்காக ரூ.9 ஆயிரத்து 500 கோடிக்கு மதிப்பீடு செய்து, மத்திய அரசின் ஒப்புத
லுக்கு அனுப்பப்பட்டது. ஊரடங்கால் மாநில வருவாய்க் குறைவைச் சுட்டிக் காட்டி, மதிப்பீட்டைக் குறைத்து அனுப் பும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது.இதனையடுத்து புதுவை அரசு ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வந்தார். நீண்ட இழுபறிக்குப் பின்னர் புதுவை அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து திங்களன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்தவுடன் மதியம் 12 மணிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில் ஞாயிறன்று இரவு ஆளுநர் உரை சட்டப்பேரவையில் இடம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் குறிப் பிட்டு முதல்வர், அமைச்சர்கள் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தினார்.அதையடுத்து இரவு 11 மணியளவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் முதல்வர் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அதில், “வேறொரு புதிய தேதியில் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திங்களன்று காலை 6.30 மணிக்கு முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். அதில், “புதுச்சேரி சட்டபேரவை கூட்டத்தொடருக்கும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வது ஜனநாயக முறைப்படி கட்டாயம்” என்று குறிப்பிட்டிருந்தார்.