திருவனந்தபுரம், மார்ச் 29- கொரோனா பாதுகாப்பு தொடர்பாக புதுமையான யோசனைகளை முன்வைக்க 'பிரேக் கொரோனா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கேரள ஸ்டார்ட்அப் மிஷன் உதவியுடன் breakcorona.in என்கிற வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு ஆதரவு, சமூக வெடிப்பு தடுப்பு, முகமூடிகள், கையுறைகளை உற்பத்தி செய்வதற்கான வழிகள், அடைப்பு காலத்தில் (லாக்டவுன்) வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதல் போன்ற எதிர்பார்ப்புகள் இதில் அடங்கும். சோதித்துப்பார்க்க நேரம் இல்லாததால், பயன்படுத்த சாத்தியமான திட்டங்களை வலைத்தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம். இவை நிபுணர்களின் குழுவால் மதிப்பாய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் தெரிவித்தார்.
165 பேருக்கு கோவிட் 19 |
நிலத்தில் இதுவரை 165 நபர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,34,370 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். 1,33,750 பேர் வீடுகளிலும் 620 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளன. சனியன்று 148 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 6067 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் 5276 மாதிரிகள் நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளன.
|
திருவனந்தபுரத்தில் சனிக்கிழமையன்று மாலை செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் கேரள மாநில நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏதேனும் சமூக பரவல் இருக்கிறதா என்பதைக் கண்டறிய கண்காணிப்பில் உள்ள அனைவரின் இரத்த மாதிரிகளையும் எடுத்து விரைவான பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுவாசக் கருவிகள், வென்டிலேட்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், எண் 95 முகமூடிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பயோமெடிக்கல் உபகரணங்கள் தயாரிக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கொச்சி, சூப்பர் பேப் ஆய்வகத்தை பெரிய, சிறிய அளவிலான தொழில்களை ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சி நிறுவனமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகளை போர்க்கால அடிப்படையில் தயாரிக்க காஞ்சிகோட்டில் தொழில் முனைவோர் கிளஸ்டர் உருவாக்கப்படும். பேப் ஆய்வகத்துடன் வி.எஸ்.எஸ்.சி-யின் வசதிகளும் பயன்படுத்தப்படும்.
1059 சமுதாய சமையலறைகள்
மொத்தம் 1059 சமூக சமையலறைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆறு மாநகராட்சிகளிலும் 87 நகராட்சிகளிலும் முழுமையாக தொடங்கப்பட்டன. இந்த நகரங்களி ல் 125 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 941 பஞ்சாயத்துகளில், 831 பஞ்சாயத்துகள் 934 சமூக சமையலறைகளைத் தொடங்கியுள்ளன. சமூக சமையலறைக்கு உள்ளாட்சி அமைப்புகள், குடும்பஸ்ரீ, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தலைமை தாங்குகின்றன. பொறுப்பானவர்களைத் தவிர வேறு யாரும் சமூக சமையலறைகளுக்குள் செல்லக்கூடாது. அவ்வாறு செல்வதும் அவர்களுடன் பழகுவதும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். படங்கள் எடுக்கவும், உரையாடவும் பலரும் அங்கு செல்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக மற்றவர்கள் அங்கு செல்வதை, அவர்கள் யாராக இருந்தாலும் கைவிட வேண்டும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 52,480 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் 41,826 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 31,263 பேருக்கு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். யார் உணவு வழங்கினாலும், உள்ளாட்சி அமைப்புகள்தான் தகுதியானவர்களை முடிவு செய்ய வேண்டும். விநியோகத்திற்கான தொண்டர்களை பொறுப்பாக்க உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக முன்வர வேண்டும்.
நோய் பரவாமல் தடுக்க சமூகமே நல்ல அக்கறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் அத்தியாவசிய சேவை. எந்த தடங்கல்களும் அதில் இருக்கக்கூடாது. சில குடியிருப்பாளர் சங்கங்கள் செய்தித்தாள் விநியோத்தை தடைசெய்வது கவனித்துக்கு வந்துள்ளது. இத்தகைய தடைகளைத் தவிர்த்து, செய்தித்தாள் விநியோகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
வாசிப்பும், உரையாடலும்
வீட்டில் இருந்துகொள்வது என்பது பலருக்கு பழக்கமானதல்ல. வீட்டில் இருக்கும்போது நீங்கள் வேறுபட்ட படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளிப்படையாக மனம் திறந்து பேசுவது நல்லது. அதோடு இந்த நேரத்தை நல்லவிதமாக வாசிப்புக்கு பயன்படுத்தலாம். கவுன்சிலிங்கிற்கான ஏற்பாட்டை அரசு உருவாக்கியுள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் அந்த வழியை நாடலாம். மக்கள் வீட்டில் இருப்பதால், வேறு பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று கழிப்பறை தொட்டிகள். தொட்டிகளில் நிரம்பி வழிவது குடிநீருக்கு கூட பிரச்சினைகளை ஏற்படுத்தும். கழிவு மேலாண்மை முறைகளை சரியான நேரத்தில் அறிவியல் ரீதியாக பின்பற்ற வேண்டும். இதை உள்ளாட்சி அமை்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாறுபட்ட சூழ்நிலைகளில் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறன. இது எல்லோருக்கும் தேவைப்படாது. அப்படி தேவைப்படாதவர்கள் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அதை பதிவு செய்ய ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு இருக்கும். மூடல் சூழ்நிலையில் மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவு மற்றும் போக்குவரத்து துறை ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளது. அதில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், கொட்டைகள், உப்பு, சர்க்கரை, எண்ணெய், வெங்காயம், தக்காளி, அரைத்த மிளகு, தேநீர், பால் பவுடர், பிஸ்கட், ரஸ்க், நூடுல்ஸ் மற்றும் ஓட்ஸ் ஆகியவை ரேசன் மூலம் வழங்க சேமிக்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக மக்களுக்கு பால், தயிர், காய்கறிகள், முட்டை, சுத்தமாக்கப்பட்ட மீன்கள், இறைச்சி பொருட்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி விற்கவும், அதிகபட்ச நபர்கள் கடைகளுக்கு வராமல், ஆன்லைனில் பொருட்களை வீட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொது விநியோக ஒருங்கிணைப்பு
பொது விநியோக நிறுவனங்களான எப்.சி.ஐ, சப்ளைக்கோ, மார்க்கெட் ஃபெட்போன்றவற்றிடம் உள்ள அத்தியாவசியப் பொருட்களின் பட்டியல் ஒருங்கிணைக்கப்படும். மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பலாப்பழம், மா, தேங்காய், காய்கறிகள், பழங்கள், முட்டை மற்றும் பால் போன்ற பொருட்களை சேகரித்து விநியோகிக்க தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். உணவுப் பொருட்கள் இருப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை.
தரத்தை உறுதிப்படுத்த ஆன்லைன் விநியோக சங்கிலி வலுப்படுத்தபபடுகிறது. இது தயாரிப்பாளர்கள், வநியோகிப்போர், நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படுத்தப்படும். ஆன்லைன் வசதி விரிவாக்கப்பட வேண்டும். மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தேசிய அளவிலான மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். முடிந்த அனைத்தையும் செய்வதாக நாஃபெட் உறுதியளித்துள்ளது.
எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்கள் அல்ல. அரிதாகவே நோயாளிகள் உள்ளனர். ஈஸ்டர் மற்றும் விஷு பண்டிகைகள் அடுத்து வருகின்றன. உணவுப் பொருட்களுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும். அதற்கேற்ப உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யத் தயாராக வேண்டும். உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் வாகனங்களுக்கு வாகன போக்குவத்து கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்கப்படும். பிற மாநிலங்களுடனான சரக்கு போக்குவரத்துக்கான தடைகளை அகற்ற உயர் அதிகாரிகளுக்கு தனிப் பொறுப்பு வழங்கப்படும்.
சாலையை மூடிய கர்நாடகா
சில மாநிலங்கள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு இணங்காத நிலைப்பாட்டை எடுத்துள்ளன. கர்நாடகா மாநிலம் சாலையில் மண் குவித்து ஏற்படுத்திய தடையை முற்றிலுமாக அகற்றவில்லை. கர்நாடக முதல்வரைத் தொடர்புகொள்வதற்காக பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. ஆனால் பிரதமரால் பொறுப்பாக்கப்பட்ட மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. மண் தடையை அகற்ற வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டபோது, அவர் கர்நாடக அரசிடம் பேசி தீர்வுகாண முடியும் என்றும் உடனடி இதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறினார். அதோடு மத்திய அமைச்சரவை செயலாளரி்ன் கவனத்திற்கு கேரள தலைமை செயலாளர் கொண்டு சென்றுள்ளார். காசர்கோடு மக்களின் மருத்துவத் தேவைகளுக்கு இந்த சாலை முக்கிய பங்கு விகிப்பதாகும்.
தமிழகத்திற்கான போக்குவரத்தில் பாலக்காடு பகுதியில் எழுந்துள்ள சில சிக்கல்களை தமிழக அரசு கையாண்டு வருகிறது. கேரளத்திலிருந்து செல்லும் லாரிகள் முறையாக கிருமி நீக்கம் செய்யப்படுவது உறுதி செய்யப்படும். நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணான்குட்டி பாலக்காட்டில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாடப்புலி சோதனைச் சாவடிக்கு வர தமிழக அமைச்சர் வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் ஜெயராமன் ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் மூலம் அந்த பகுதியில் வாகன போக்குவரத்தை உறுதி செய்யலாம்.
வெளி மாநில தொழிலாளர்கள்
கேரளாவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பல்வேறு முதலமைச்சர்கள் கடிதங்கள் எழுதியுள்ளனர். தமிழ்நாடு, நாகாலாந்து, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் முதலமைச்சர்களுக்கு அளித்துள்ள பதிலில் கேரள அரசு இதில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வெளி மாநில தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை சமாளிக்க மாநில அளவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும் தலையீடு தேவைப்பட்டால் அவரை தொடர்பு கொள்ளவும் முதல்வர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்களைச் சார்ந்திருக்கும் மக்கள் இந்த காலகட்டத்தில் பசியுடன் இருக்கக்கூடாது. அவர்களுக்கான உணவை உறுதிப்படுத்த வேண்டும். அங்கிருந்து உணவு சாப்பிட்ட மக்களுக்கு ஏற்கனவே அதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருட்களை வாங்க மக்கள் அவசரப்படுவது இயல்பு. திருவனந்தபுரத்தின் செயலக சங்கத்தின் கடையில், தேவையான பொருட்களின் பட்டியலுடன தொலைபேசி எண் கொடுத்தால் டோக்கன் தருகிறார்கள். பொருட்களை எடுத்து வைத்துவிட்டு தகவல் தருகிறார்கள்இது ஒரு நல்ல உதாரணம். இந்த கட்டத்தில் இது மிகவும் அவசியம்.
இடுக்கியின் தோட்டம் பகுதியில் அரிசி விநியோகத்திற்கு சிவில் சப்ளைஸ் துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அங்கே ஒரு சிறப்பு வகை அரிசி பயன்பாட்டில் உள்ளது. காய்கறிகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய அங்கு செல்லும் வாகனங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக தொண்டர்களின் பதிவு வேகமாக நடந்து வருகிறது. இதுவரை, 78,000 பேர் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதல்வர் நிவாரண நிதிக்கு பங்களிப்பு
முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவதற்கான அழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. லுலு குழுமத் தலைவர் எம்.ஏ. யூசுப் அலி ரூ .10 கோடி செலுத்துவதாக உறுதியளித்தார். ஆர்.பி குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை ரூ .5 கோடி வழங்கினார். அவருக்கு சொந்தமான கொல்லம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் கோவிட் தடுப்புக்கு பயன்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளார். மலபார் கோல்டு ரூ .2 கோடிக்கும் வாக்குறுதிகள் அளித்துள்ளது. பல தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து தன்னார்வ செய்திகள் வருகின்றன. நெருக்கடி காலங்களில் நாட்டிற்கும் மக்களுக்கும் உள்ள அர்ப்பணிப்பு மற்றும் அன்புதான் இதற்கு காரணம். இந்த நிலையில் பலரால் நேரடியாக பங்களிப்புகளை செய்ய முடியவில்லை. ஆன்லைனில் அனைவரும் பணம் செலுத்தலாம். cmdrf.kerala.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் நன்கொடைகளை வழங்கலாம். இந்த முறையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.