புதுதில்லி, ஏப். 1 - இந்தியாவில், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மோடி ஆட்சியில் 4 கோடியே 70 லட்சம் ஆண் - பெண்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.) கூறியிருந்தது.“மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2011-12-இல் 30.4 கோடி ஆண்கள்- பெண்கள் வேலையில் இருந்தார்கள். ஆனால், 2017-2018-இல் எடுத்த சர்வேயில் நாட்டில் 28.6 கோடி ஆண்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். அதாவது 1.8 கோடி ஆண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 2011-12ஆம் ஆண்டிலிருந்து 2017-18 வரையிலான காலகட்டத்தில் ஆண் - பெண்என மொத்தமாகக் கிராமப்புறங்களில் 4.3 கோடி பேரும், நகர்ப்புறங்களில் 40 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால், 4 கோடியே 70 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்” என்று என்.எஸ்.எஸ்.ஓ. தெரிவித்திருந்தது.இந்நிலையில், பாஜக ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று 59 சதவிகித பாஜகஆதரவாளர்களே ஒப்புக் கொள்வதாக, அமெரிக்க நிறுவனம், தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த ‘பா ரிசர்ச் செண்டர்’ (ஞநற சுநளநயசஉh ஊநவேநச) என்ற நிறுவனம், கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இந்தியர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில், எந்தப் பிரச்சனைகளை முக்கியமானவையாக பார்க்கிறார்கள்; மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கப் போகும்விஷயங்கள் எவை? என்பதை மையமாக வைத்து, நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியர்களின் தாங்கள்எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையாக, வேலையின்மை, லஞ்சம், பயங்கரவாதம், குற்றச் செயல்கள், ஏழை -பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு, தரமான கல்வியின்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக, நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாஜக ஆட்சி அமைந் ததில் இருந்து, வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்துள்ளது என்று 67 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் தலா 65 சதவிகிதம் பேரும், பயங்கரவாதம் முக்கியப் பிரச்சனை என்று 59 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். அத்துடன், ஏழை - பணக்காரர் இடைவெளி அதிகரித்து இருப்பதாக 54 சதவிகிதம் பேரும், சாதி, மத, இன அடிப்படையிலான நல்லிணக்கம் மோசமடைந்து இருப்பதாக 45 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால், மோடியின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து இருப்பதாக, பாஜகஆதரவாளர்களே சுமார் 59 சதவிகிதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது என்பதையும் சுமார் 62 சதவிகித பாஜகஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக ‘பா ரிசர்ச் செண்டர்’ ஆய்வு கூறுகிறது.லஞ்சம் - ஊழல் அதிகரித்து இருப்பதாக மூன்றில் இரண்டு பங்கினர் கூறுகின்றனர் என்றால், திருத்தவே முடியாத அளவிற்கு லஞ்ச - ஊழல் மாறியிருக்கிறது என்று 43 சதவிகிதம் பேர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் ஊழல் இருப்பதாக,அந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்களே - சுமார் 69 சதவிகிதம் பேர் ஒப்புக் கொள்வதாகவும் ‘பா ரிசர்ச்’ கூறியுள்ளது.ஒட்டுமொத்தமாக, வேலையின்மையே இந்த தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் என்று ‘பா ரிசர்ச் செண்டர்’ கணித்துள்ளது.