tamilnadu

img

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி கவிழ்கிறது

இம்பால்:
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை, தேசியமக்கள் கட்சி (NPP) வாபஸ் பெற்றுள்ளது. இதனால், மணிப்பூர் மாநிலபாஜக ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

மணிப்பூரில் கடந்த 2017-இல்சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற் றது. 60 இடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்தலில்,  காங்கிரஸ் 28 இடங் களை பிடித்தது. பாஜக-வுக்கோ 21 இடங்கள்தான் கிடைத்தன.எனினும், தேசிய மக்கள் கட்சி (NPP) மற்றும் நாகா மக்கள் முன்னணியின் (NPF) தலா 4 எம்எல்ஏ-க்கள், லோக் ஜனசக்தி கட்சி (LJP),திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும்சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 3 பேர் எனமொத்தம் 32 எம்எம்ஏ-க்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பிரேன் சிங் முதல்வர் ஆனார். என்பிபிகட்சியின் ஒய்.ஜாய்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் பட்டது.

பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 7 பேரை பாஜக-வில் சேர்த்துபிரேன் சிங் தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டார். ஆனால், அந்த 7 எம்எல்ஏ-க்கள் மீது தொடரப்பட்ட தகுதிநீக்க வழக்கில், அவர்கள் சட்டப்பேரவைக்குள் நுழையக் கூடாது என்று மணிப்பூர்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு காங்கிரஸ் எம்எல்ஏதகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். இதனால் சட்டப்பேரவையின் பலம் 52 ஆக இருந்தது.இந்நிலையில்தான் துணைமுதல்வர் ஒய்.ஜாய்குமார் உட்பட தேசிய மக்கள் கட்சியின் 4 அமைச்சர்களும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ என 2 பேரும் தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, பாஜக எம்எல்ஏ-க்கள் மூன்று பேர் திடீரென தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.இதனால் மணிப்பூர் மாநில பாஜக அரசை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. 

மணிப்பூர் சட்டப்பேரவையின் தற்போதைய பலம் 49 என்ற நிலையில், பெரும்பான்மைக்கு 25 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால், 18 எம்எல்ஏ-க்களே இருப்பதால் பாஜக அரசு பெரும்பான்மை இழந்து, கவிழும் நிலை ஏற்பட் டுள்ளது.மணிப்பூரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், மணிப்பூர் மன்னர் லீஷம்பா சனாஜோபாவை, பாஜக தனது வேட்பாளராக நிறுத்தி இருந்தது. இந்த பின்னணியிலேயே, கூட்டணி கட்சிகள் பாஜக அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளன. இந்த முடிவு, மாநிலங்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.