சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஏற்கெனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், 11ஆம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை திங்களன்று (ஆக.24) தொடங்கியுள்ளது. பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.முகக் கவசம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுவதாகவும், மதிப்பெண்களை காரணம் காட்டி யாருக்கும் சேர்க்கை மறுப்பதில்லை என்றும் பள்ளிகள் விளக்கமளித்துள்ளன.10 ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி அடைந்திருப்பதால், இந்த ஆண்டு 11ஆம் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேருவார்கள் என எதிர்பார்ப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.