புதுதில்லி:
கர்நாடக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவு, கவனத்தில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது, பாஜக வட்டாரத்தில் புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைப்பெற்று வந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, கடந்த ஜூலை 23-ஆம் தேதி கவிழ்ந்தது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 17 பேர், திடீரென பாஜக ஆதரவு நிலையெடுத்து, தங்களின் பதவியை ராஜினாமா செய்ததாலேயே குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
எடியூரப்பா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி ஏற்பட்டது.முன்னதாக பாஜகவுக்கு ஆதரவாக மாறிய 17 எம்எல்ஏ-க்களையும் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்ததால், அவர்கள் 2023-ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.இதை எதிர்த்து 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரணை நடத்தி, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.இதனிடையே சில நாட்களுக்கு முன்பு பாஜக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் எடியூரப்பா, “கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது என்றால், அதற்கு தகுதி நீக்க எம்எல்ஏ-க்களே காரணம். அவர்களை பாஜக தலைவர் அமித்ஷா தனது கட்டுப்பாட்டில் மும்பையில் வைத்து பாதுகாத்தார். பாஜக ஆட்சி அமைக்க தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை தியாகம் செய்துள்ளனர். அதுதான் ஆபரேஷன் தாமரை” என்று அவராகவே உண்மைகளை உளறி விட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குமாரசாமி ஆட்சியை, பாஜக-தான் திட்டமிட்டு கவிழ்த்தது என்பதற்கு எடியூரப்பாவின் பேச்சே ஆதாரமாக மாறியது.இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு ஆஜரான காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தகுதி நீக்க வழக்கில், எம்எல்ஏ-க்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு எடியூரப்பாவின் இந்த ஆடியோவை ஆதாரமாக கருத வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது கபில்சிபலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.வி. ரமணா, எம்எல்ஏ-க்கள் ராஜினாமா குறித்த எடியூரப்பாவின் ஆடியோ, தீர்ப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும் என்றார். மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.