தலசேரி:
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரம் செறிந்த போராட்டங்கள் நடத்திய தியாகிகளை வரலாற்றிலிருந்து அழிக்க நாட்டில் முயற்சி நடைபெற்று வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். தங்களுக்கு இடம் இல்லாத சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வேறு யாருக்கும் இடம்இல்லை என்ற உறுதியுடன் அவர்கள்தவறான விளக்கத்திற்கு வந்துள்ளனர்என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.விடுதலைப்போராட்டத்தின் பகுதியான, 1940 செப்டம்பர் 15 போராட்டத்தின் 80 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அவர், சிபிஎம் தலசேரி பகுதி குழுவின் முகநூல் பக்கத்தில் நினைவு உரை நிகழ்த்தினார். அப்போது மேலும் கூறியதாவது: சுதந்ந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஒளிந்து கொண்டவர்கள் யார் என்பதை எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்வதைத் தடுக்கும் முயற்சி நடக்கிறது. ஏகாதிபத்திய ஆதரவின் கறையை கழுவி, புனிதப்படுத்தத்தக்க சூழ்நிலையாக அவர்கள்கருதுகின்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டை எடுத்த இந்து மகாசபாவின் வாரிசுகளால் இது செய்யப்படுகிறது. இது தேசபக்தி இயக்கங்களை காட்டிக் கொடுக்கும் பாரம்பரியத்துடன் அத்தகைய தனிநபர்களையும் இயக்கங்களையும் பெருமைப்படுத்துவதாகும்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நேருக்கு நேர் நின்று போராடிய வாரியன் குன்னத்தும், அலிமுஸ்லியாரும் இல்லாமல் என்ன ஒருவரலாற்று பதிவு. நிலப்பிரபுத்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான விவசாயிகள் போராட்டங்களும் இதேபோல் புறக்கணிக்கப்படுகின்றன. புன்னாப்புறா- வயலார் போராட்டம் தேசிய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதை யார் ஒப்புக்கொள்வார்கள்? அவர்கள் போராடியதால்தான் இந்தியாவின் ஒரு பகுதியாக திருவாங்கூர்
மாறியது. ‘பிரிட்டிஷ் ஆட்சி அழியட்டும்’ என்ற முழக்கத்துடன் தூக்கிலிடப்பட்ட கையூர் தியாகிகளின் போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதல்ல என்றால், யாருடைய போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது? என பினராயி கேட்டார்.
குடியுரிமைச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம் பெரும் பகுதியினரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றத்துக்காக சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரை சிக்க வைக்கும் ஒரு மோசமான நடவடிக்கையை தில்லியில் பார்க்க முடிகிறது எனவும் முதல்வர் கூறினார்.