புதுதில்லி:
மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 24-ஆம்தேதி காலமானார். இந்நிலையில், தலைவர்களின் அஞ்சலிக்குப் பின், ஞாயிற்றுக்கிழமையன்று ஜெட்லியின் உடல் ஊர்வலமாக தில்லியில் உள்ள நிகாம்போத் காட் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில்தான், ஜெட்லி இறுதி நிகழ்ச்சியின் போது, திருடர்கள் கூட்டத்திற்குள் புகுந்து, பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ உள்பட 11 பேரின் செல்போன்களை திருடிவிட்டதாக ‘பதஞ்சலி’நிறுவன செய்தி தொடர்பாளர் எஸ்.கே. திஜரவாலா ட்விட்டர் பக்கத்தில் வருத்தப்பட்டுள்ளார். செல்போனை பறிகொடுத்தவர்களில் இவரும் ஒருவர். செல்போன் திருட்டு குறித்து, திஜரவாலாவைப் போலவே மேலும் 4 பேர், காஷ்மியர் கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திஜாரவாலா, தனது செல்போன் திருடுபோனது குறித்த செய்தியில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டேக் செய்துள்ளார். இதுவரை மொத்தம் 5 பேர் புகார் அளித்துள்ளனர்.