திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சுப்பையா புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் தோட்டத்திற்கு அருகே ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தது குறித்து முருகன் மானூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் நேரடியாக முருகன் வீட்டிற்கு வந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளது.
இந்நிலையில் மணல் கும்பலுக்கு ஆதரவாக மானூர் உதவி ஆய்வாளர் ஒருவர் முருகனை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து மிகக் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைத் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.