புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘ராஜீவ் காந்தியை முன்வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முடியுமா?”என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரின் இந்த கேள்விக்கு, தில்லி பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பதிலடி கொடுத்துள்ளார்.‘பிரதமர் மோடிக்கு, தில்லியின் மகளாக ஒரு சவால் விடுகிறேன்; கடைசிக் கட்ட தேர்தல்களை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பெண்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி சந்திப்பதற்கு மோடி தயாரா?” என்று கேட்டுள்ளார்.
மேலும், “பிரதமர் மோடியின் நிலைமை, வீட்டுப் பாடத்தை முடிக்காத ஒரு பள்ளிக் குழந்தையை போன்றாகி விட்டது” என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, “பள்ளிக்கு வரும் அந்த குழந்தையிடம், ஏன் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்று கேட்டால், ‘நேரு, எனது வீட்டுப் பாடத்தை மறைத்து வைத்துவிட்டார்’, ‘இந்திரா காந்தி, எனது வீட்டுப் பாட தாளில் விளையாட்டுப் பொருள் செய்துவிட்டார்’ என்று சொல்வது போலத்தான் மோடியின் நிலைமை உள்ளது” என்றும் கிண்டலடித்துள்ளார்.
“மோடி பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையும் கிடைக்கவில்லை என்பதால்தான், என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார். ஆனால், இந்தியாவில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்பு கிடையாது. வரலாறு நமக்கு வழங்கும் ஆதாரமும் இதுதான். மகாபாரதத்தை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம். துரியோதனனிடம் இருந்த அகங்காரம் தான் தற்போது பிரதமர் மோடியிடமும் உள்ளது. பகவான் கிருஷ்ணர் துரியோதனனிடம் சமரசம் பேச முயற்சி செய்த போது, அவன் கிருஷ்ணனையே சிறைப்பிடிக்க முயற்சித்தான். அதுவே அவனது வீழ்ச்சிக்கு வித்திட்டது” என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.