புதுதில்லி:
விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் வேலையில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் உள்ள விமானநிலையங்களை தனியார் மயமாக்க, கடந்தாண்டே முடிவு செய்து, அவற்றில் 5 விமான நிலையங்களை குத்தகைக்கு விட்டது.இவற்றில் கவுகாத்தி தவிர, அகமதாபாத், திருவனந்தபுரம், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் ஆகிய 5 விமான நிலையங்களை பிரதமர் மோடியின் நெருங்கியநண்பரும், நாட்டின் பெருமுதலாளிகளில் ஒருவருமான அதானி ஏலத்தில் எடுத்தார்.
எனினும், திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பை தனியாருக்கு கொடுப்பதற்கு, மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு இழுபறி நீடிக்கிறது.இந்நிலையில்தான், அடுத்த கட்டமாக ஆண்டுக்கு 10 - 15 லட்சம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் பட்டியலில் இணைக்கப்பட்டு, விரைவில் ஏலம்விட மோடி அரசு திட்டமிட்டுள்ளது.இத்தகவலை, இந்திய விமான நிலையஆணையத்தின் (ஏ.ஏ.ஐ) தலைவர் குருபிரசாத் மொகபத்ரா தெரிவித்துள்ளார்.“ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதத்தில்6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது; தற்போது, இரண்டாம்கட்டமாக, 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இரண்டாம் கட்டமாக ஒப்படைக்கப் போகும் விமான நிலையங்கள் அனைத் தும் சர்வதேச விமான நிலையங்களாகும். அதாவது, ஆண்டொன்றுக்கு 15 லட்சம் பயணிகள் வந்துபோகும் விமான நிலையங்கள். ஏனெனில், ஒரு நாளில் குறைந்தபட்சம் 50 முதல் 60 விமானங்கள் இயங்கக் கூடிய விமான நிலையங்கள் மட்டுமே தனியார் நிறுவனங்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும்” என்று மொகபத்ரா கூறியுள்ளார்.