tamilnadu

img

தயவு செய்து அமித்ஷா வரலாறு படிக்க வேண்டும்.... மோசமான வானிலைக்கும் நேருதான் காரணம் என்று உளற வேண்டாம்...

புதுதில்லி:
இரு தேசக் கோட்பாட்டுப் பிரச்சனையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா உண்மை தெரியாமல் பேசுவதாகவும், அவர் தயவுசெய்து வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது.நாடாளுமன்றத்தில், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை அறிமுகப் படுத்திப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் மதரீதியாக பிரிவினையை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று கூறினார். இந்தக் குற்றச் சாட்டுக்குத்தான் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான எதிர்வினைகளை செய் துள்ளனர்.“அமித்ஷா அரசியலமைப்புப் பாடத்தில் மட்டும் தோற்கவில்லை, வரலாற்றுப் பாடத்திலும் தோற்றுவிட்டார். சாவர்க்கர், ஜின்னா இருவரும்தான் இரு தேசக் கோட்பாட்டை முன்வைத்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களால்தான் (ஆர்எஸ்எஸ் - பாஜக) இந்தியாவின் ஆன்மா ரத்தம் வடிக்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் சாடியுள்ளார்.“என்னைப் பொறுத்தவரை அமித்ஷாவரலாற்றுப் பாடவகுப்புகளில் கவனமில்லாமல் இருந்திருப்பார் என நினைக்கிறேன். சுதந்திரப் போராட்ட காலம் முழுவதிலும், காங்கிரஸ் கட்சிதான், இந்தியா அனைத்து மதங்களுக்குமானது என்று கூறி ஒவ்வொருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. 

காங்கிரஸ் கட்சியுடன் மாறுபட்ட கருத்துடன் இருந்தது, இந்து மகா சபா.இந்தியா பிரிந்து இரண்டு நாடாக வேண்டும் என்று இந்து மகாசபாதான், 1935-இல்பேசியது. இந்து மகாசபாவின் அந்தக் கருத்தையே முஸ்லிம் லீக்கின் தலைவர்முகமது அலி ஜின்னா பின்னர் வலியுறுத்தினார்.இந்த இருவரும்தான் இந்துக்களும், முஸ்லிம்களும் தனித்தனியாகப் பிரிய வேண்டும் என விரும்பினார்கள். ஆனால்,1945 வரை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்தலைவராக இருந்தார். அவர் மவுலானா ஆசாத். ஒருவரின் குடியுரிமையை, தேசியத்தை, மதத்தை வைத்து நிர்ணயிக்கும் தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சி அடிப்படையில் இருந்தே எதிர்க்கிறது” என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியுள்ளார்.மேலும், “அனைத்துக்கும் காங்கிரஸ்கட்சிதான் காரணம் என்று பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். தில்லியில் மோசமான வானிலை நிலவினால் அதற்கும் கூடகாங்கிரசும், நேருவும்தான் காரணம் என்பார்கள் பாஜகவினர்” என்று சாடியுள் ளார்.காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர் பாளர் மணிஷ் திவாரி அளித்த பேட்டியொன்றில், “நாடு பிரிக்கப்பட்டது பற்றி அமித்ஷா பேசியுள்ளார்; ஒருவேளை சுதந்திரப் போராட்டத்தின்போது, காங்கிரஸ் தலைவர்கள் கைதாகி சிறையிலிருந்தபோது இந்து மகாசாபா அல்லது முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாரோ ஒருவர்அரசை நடத்தி இருக்கலாம்; ஏனெனில் இந்து மகாசபாவுக்கும், முஸ்லிம் லீக்கிற்கும் வரலாற்று ரீதியாக உறவு இருக்கிறது; ஒருவகையான வகுப்புவாதம் தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள மற்றொரு வகையான வகுப்புவாதத்தின் துணை அதற்கு அவசியம்” என்று காட்டமாக கூறியுள்ளார்.மேலும், “உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய வரலாற்றை முறையாகப் படித்துவிட்டு, மக்களிடம் பேச வேண்டும்; சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரசின் பங்களிப்பு குறித்தும், பாஜக-வின் பங்களிப்பு குறித்தும் விவாதம் கூட வைத்துக் கொள்ளலாம்” என்று சவால் விடுத்துள்ளார்.