புதுதில்லி:
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் அவர் களின் எதிர்கால வாழ்க்கையை முற்றிலுமாக குலைத்துப் போட்டு விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்’ தில்லியில் மட்டும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சுமார்94 சிறுமிகள் மற்றும் 6 சிறுவர்களிடம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில்தான், இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
குறிப்பாக, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபின் மூன்றில் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது,பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டகுழந்தைகளில் 33 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளதாகவும், 9 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே மீண்டும் பள்ளிக்குச் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான குழந்தைகளின் இடைநிற்றலுக்கு, நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப்படும் சட்டமுறை, பாதுகாப்பு மற்றும் உடல்நலக் குறைபாடு, சமூக களங்கம் ஆகியவைதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 55 சதவிகிதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதில், பல்வேறு விதமான சவால்களை சந்திக்கின்றனர். 47 சதவிகித குடும்பங் கள் பாதுகாப்பின்மை காரணமாக தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பதயங்குகின்றனர்.பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை, உரிய முறையில் அணுகிப் பெறுவதிலும், பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லைஎன்று ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மன ரீதியிலும், உடல்ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசு வழங்கும் இழப்பீடு பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரின் குடும்பத்தினரின் மன ரீதியிலான பாதிப்பை சரிசெய்ய உதவும் வகையில் இல்லை” என்பதையும் ஒரு காரணமாக, தில்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ரமேஷ் நேகிகூறியுள்ளார்.
கடந்த 2017-18ஆம் ஆண்டில் தில்லியில் மட்டும் சுமார் 932 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 849 வழக்குகளில் சிறுமிகளும், 83 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் வாறு பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.