புதுதில்லி:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் எஞ்சி நிற்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்படும் முயற்சியை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை பொது இயக்குநர் பி.கே.புர்வாருக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு விரிவான கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் வருமாறு:
கடந்த 20 வருட காலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தங்களுடைய வியர்வையும், ரத்தத்தையும் சிந்திய ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தட்டிப் பறிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை களை நீங்கள் பிஎஸ்என்எல் நிறு வனத்தின் முதன்மை பொறுப்பாளர் மற்றும் இயக்குநராக என்றைக்கு பொறுப்பேற்றீர்களோ அந்த நாளில் இருந்து செய்து வருகின்றீர்கள். உங்களுடைய உத்தரவின் அடிப்படையில் அயற்பணி (அவுட் சோர்சிங்) என்ற திட்டத்
தின் மூலம் பெருமளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்கனவே வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள். அயற்பணி திட்டம் அமுல்படுத்திய பிறகு தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புக்களின் பழுதுகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன, பல இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன என்ற செய்தி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.மறுபடியும் 01.09.2020 அன்று ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளீர்கள். அந்த உத்தரவில் ஹவுஸ் கீப்பிங் மற்றும் பிறஒப்பந்த தொழிலாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருக்க வேண்டியநியாயம் இல்லை என்று குறிப்பிட்டுள் ளீர்கள். ஒப்பந்த தொழிலாளர்களை வேலையில் இருந்து விரட்டுவதற்கு திட்டத்தை உடனடியாக வகுக்கும்படி மாநிலங்களில் உள்ள முதன்மை தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளீர்கள்.
79 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய பிறகும்...
விருப்ப ஓய்வுதிட்டம் 2019 மூலமாகசுமார் 79000 ஊழியர்கள் வேலையைவிட்டுநீக்கப்பட்டு விட்ட பிறகு தற்போதுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் தொடர்வது கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை வேலையில் இருந்து விரட்டுவதற்கு முடிவு செய்துள்ளீர்கள், இது நாடெங்கிலும் உள்ள தொலைதொடர்பு பராமரிப்பு சேவை மேலும் மோசமாவதற்குத்தான் துணை போகும். இதன் விளைவாக சேவையின் தரம் சந்தேகத்திற்கிடமின்றி சீரழிந்துள்ளது, இது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செயல்படுகின்ற அனைத்து அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் ஒருமித்த கருத்தாகும்.
விருப்ப ஓய்வு திட்டம் 2019 அமுல்படுத்துவதற்கு முன்னால் இத்திட்டத்தின் மூலம் நிறுவனத்தின் செலவினங்கள் பெருமளவில் குறைந்து விடுவதால் பிஎஸ்என்எல் நிறுவனம் மறுபடியும் பொருளாதார ரீதியாக புத்தாக்கம் பெற்று விடும் என்று பெரிதாக டமாரமடித்தீர்கள். ஆனால் விருப்ப ஓய்வு திட்டத்தை அமுல்படுத்திய பிறகுநிறுவனத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது என்று சொல்வதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்கமுடியவில்லை. வாடகை மற்றும்மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு உண்டான நிலுவைத் தொகை செலுத்தமுடியவில்லை. நிறுவனத்திற்கு கடனாக பொருள் கொடுத்தவிற்பனையாளர்களுக்கும் பணம்செலுத்தமுடியவில்லை. இவைகளி லிருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் சிக்கலில் உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது.
சாவுகளுக்கு யார் பொறுப்பு?
எல்லாவற்றிற்கும் மேலாக ஏழை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 14 மாத சம்பளம் வழங்கவில்லை, இதன் காரணமாக 13 ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சாவுகளுக்கு யார் பொறுப்பு? சந்தேகமே இல்லாமல் உங்கள் தலைமையிலான பிஎஸ்என்எல் நிர்வாகமே காரணம் என்று குற்றம் சாட்டுகின்றோம்.தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் எல்லாம் அயற்பணி திட்டம்மூலமே தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றன என்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்புமை செய்து நீங்கள் நியாயப்படுத்தலாம். பிஎஸ்என்எல் தனியார் நிறுவனம் அல்ல என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். மத்திய அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம், இந்த நாட்டிற்கும்நாட்டு மக்களுக்கும் கடமை ஆற்றவேண்டிய பொறுப்பு இருக்கின்றது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.பிஎஸ்என்எல்-ல் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அபரிமிதமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசின் தொழிலாளர் துறை நிர்ணயித்துள்ள சம்பள விகிதத்தில் தான் வழங்கப்படுகின்றது. இந்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு தான் அவர்களுக்கு இபிஎப், இஎஸ்ஐ போன்றசமூக நலத்திட்டங்கள் அமுல்படுத்தப் படுகின்றன. எனவே ஒப்பந்த தொழி லாளர்களை பணியில் வைத்திருப்பதால் பிஎஸ்என்எல் நிதி வீணாகின்றது, விரயமாகின்றது என்று நிர்வாகம் சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இது தனியார் நிறுவனம் அல்ல!
அயற்பணி மூலம் தொலை தொடர்பு சேவைகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள் சில்லறைத் தொகையை சம்பளமாக தொழிலாளர்களுக்கு வீசுவதைப்போல் பிஎஸ்என்எல் நிர்வாகமும் நடந்துகொள்ள முயற்சிக்க கூடாது. பிஎஸ்என்எல்மத்திய அரசிற்கு சொந்தமான நிறுவனம். குறைந்த பட்ச ஊதிய மற்றும்தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிட்டுள் ளதைப் போல் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இபிஎப், இஎஸ்ஐ போன்ற சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, ஆனால் பிஎஸ்என்எல் நிறு வனத்தை தனியார் நிறுவனத்தைப்போல் நீங்கள் நடத்த முயற்சிப்பது ஒரு பெரிய சோகமாகும்.
தொலைதூரக் கனவாக...
பிஎஸ்என்எல்நிறுவனத்திற்கு 4G தொழில் நுட்ப வசதிகளை மத்திய அரசுவழங்காததால் பிஎஸ்என்எல் புத்தாக்கம்என்பது தொலை தூரக் கனவாக மாறிவருகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜிஅலைக்கற்றை வழங்குவது என்பதுஇன்னும் ஏட்டளவில் தான் உள்ளது.பிஎஸ்என்எல் புத்தாக்க அறிவிப்பு வெளியிட்டு 10 மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் 4ஜி சேவை தொடங்க இயலவில்லை. இந்தக் காரணத்தினால் தான் பிஎஸ்என்எல்நிறுவனம் தன்னுடைய வருவாயை அதிகரிக்க முடியவில்லை.இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 4ஜி தொழில்நுட்ப வசதிகளுடைய ஏர்டெல் நிறுவனமும் வோடொ ஐடியா போன் நிறுவனமும் மே 2020-ல் ஒவ்வொன்றும் 47 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. ஆனால் 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்ப வசதிமட்டும் உடைய பிஎஸ்என்எல் நிறுவனம் 2 லட்சம் புதிய இணைப்புக்களை பெற்றுள்ளது.
அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு சேவை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் இருந்ததால் தான் இதுசாத்தியமானது என்பதை வெளிகாட்டுகின்றது. உண்மை இவ்வாறிருக்க ஒப்பந்ததொழிலாளர்களை முற்றிலுமாக நீக்குவது என்ற உங்கள் முடிவு பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேலும் மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும்.பிஎஸ்என்எல்வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் உன்மையான பங்களிப்பு செய்கின்றார்கள். அவர்கள் வெறும் ஒட்டுண்ணி அல்ல என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றது. இருந்த போதிலும் ஏதேனும் ஒப்பந்த தொழிலாளர்கள் எங்காவது தேவைக்கு மேல் இருப்பதாக நிர்வாகம் கருதினால் அவர்கள் விற்பனை பிரிவில் வருவாயைக் கூட்டும் பணியில் ஈடுபடுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து வீட்டுக்குஅனுப்புவது என்ற தங்களின் பழையமுடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை லாபகரமாக பயன்படுத்துவது சம்பந்தமாக பிஎஸ்என்எல் உள்ள அனைத்து சங்கங்களுடனும் அமைப்புக்களுடனும் காணொலி மூலமாக கூட்டம் நடத்து மாறு கேட்டுக்கொள்கின்றோம்.