tamilnadu

img

புதிய முதலீடு, வேலைவாய்ப்பு, வாங்கும் சக்தி அதிகரிப்பு பற்றி ஒன்றும் கூறாத பட்ஜெட்...5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு வாய்ப்பே இல்லை!

புதுதில்லி:
இன்றையப் பொருளாதார சூழலின் அடிப்படையில் பார்த்தால், இன்னும் 5 ஆண்டுகள் ஆனாலும், இந்தியா5 டிரில்லியன் டாலர் (ரூ. 350 லட்சம்கோடி) பொருளாதாரத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பொருளாதார வல்லுநர்களில் ஒருவரும், திட்டக்கமிஷன் முன்னாள் துணைத்தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் தொடர் பாக அளித்துள்ள பேட்டியில் அலுவாலியா மேலும் கூறியதாவது:-மத்திய அரசு 2024-25 நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் (ரூ. 350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டுவோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.நாட்டின் வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதம் வரை இருந்தால்தான் அந்த இலக்கைஎட்ட முடியும். ஆனால் தற்போது 5 சதவிகிதத்திற்கும் குறைவான வளர்ச்சி விகிதத்திலேயே நாடு சென்று கொண்டிருக்கிறது. இதன்படி பார்த்தால், மத்தியஅரசு கூறியுள்ளபடி 2024-25 நிதியாண்டுக்குள் அதனை எட்டுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. இப்போது 4.5 சதவிகித பொருளாதார வளர்ச்சி நிலவரம் சற்று அதிகரித்து, அடுத்த ஆண்டில்5 சதவிகிதமாகலாம். இதுபோதுமானது அல்ல. விரைவான வளர்ச்சி வேண்டும். குறிப்பாக 8 சதவிகிதத்திற்கு மேலானவளர்ச்சி நமக்கு இப்போது தேவை. அதற்கான வாய்ப்புகள்தான் ஏற்படுத்தப்படவில்லை.

முதலீடுகள், மக்கள் வாங்கும் சக்தி போன்றவற்றை அதிகரிப்பதற்கான செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் இல்லை. இந்த பட்ஜெட்டில் கூட அதற்கு சரியான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.முதலீடு மற்றும் ஏற்றுமதி விவகாரங்களில் இன்னும் வேகம் தேவைப்படுகிறது. அதை செய்யவில்லை. வங்கிகள் கடன்கொடுப்பது குறைந்துவிட்டது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக அவர்கள் கடன் கொடுப்பது இல்லை. இதனால் முதலீடு செய்யமுடியாத நிலை தொழிலதிபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நமது வரி வசூல் நடைமுறைமற்றும் சட்டங்கள் பல்வேறு சிக்கல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்வகையில் இருக்கின்றன. பல விஷயங்கள் சட்டவிரோத செயல்களாக காட்டப்படுகின்றன.எனவே, தொழில் முதலீடுகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்குவிப்பு தன்மை குறைந் திருக்கிறது. இவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் களையப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

பணமதிப்பு நீக்கத் திட்டம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்தி கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. தனியார் முதலீடும் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நிலைமையும் மோசமாக இருக்கின்றன. அவற்றைச் சரிபடுத்த வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதில்மாற்றங்களை செய்ய வேண்டும்.குறிப்பாக, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதுடன் ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.