புதுதில்லி:
நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உரம், சிமெண்ட், ஸ்டீல், சுத்திகரிப்பு ஆகிய துறைகள் ஒரு நாட்டின் மிகமுக்கிய அடிப்படைத் தொழிற்துறைகளாக (Core Sector) கருதப்படுகின்றன, இந்நிலையில், இந்தியாவில் அந்த 8 அடிப்படைத் தொழிற்துறைகளும், 2019 ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும், 2020 ஏப்ரலில் கடும் அடி வாங்கியுள்ளன. வளர்ச்சிக் குறைவில் சென்று கொண்டிருந்த இந்த துறைகள், தற்போது எதிர்மறை வளர்ச்சியில் மைனஸில் பயணிக்க ஆரம்பித்துள்ளன.ஏப்ரல் 2019-ல் 3.2 சதவிகிதம்வளர்ச்சி கண்டிருந்த நிலக்கரித் துறை, ஏப்ரல் 2020-இல் மைனஸ் 15.5சதவிகிதமாகி இருக்கிறது. 2019 ஏப்ரலில் 5.9 சதவிகிதம் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த மின்சாரத்துறை, 2020 ஏப்ரலில் மைனஸ் 22.8 சதவிகிதமாகி இருக்கிறது.
இதேபோல 0.8 சதவிகிதமாக இருந்த இயற்கை எரிவாயுத்துறை மைனஸ் 19.9 சதவிகிதமாகவும், 6.7 சதவிகிதமாக இருந்த கச்சா எண்ணெய் துறை, 2020-இல் 6.4 சதவிகிதமாகவும், 2019 ஏப்ரலில் 4.4 சதவிகிதமாக இருந்த உரங்கள் துறை 4.5 சதவிகிதமாகவும் வளர்ச்சியை(!) பதிவு செய்துள்ளன.சிமெண்ட் துறை 2019 ஏப்ரலில்2.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில், தற்போது அது மைனஸ் 86 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஸ்டீல் துறையும் கடந்தாண்டின் 13.3 சதவிகிதத்திலிருந்து, தற்போது மைனஸ் 83.9 சதவிகிதமாக வீழ்ச்சிகண்டுள்ளது. சுத்திகரிப்புப் பொருட்கள் துறை 2019-இல் 4.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது. 2020இல் அது மைனஸ் 24.2 சதவிகிதம் என்றஅளவிற்கு இறங்கியுள்ளது.ஒட்டுமொத்தமாக 2019 ஏப்ரலுக்குப் பின், 8 துறைகளும் சராசரியாக மைனஸ் 38.1 சதவிகிதம் என்றவீழ்ச்சியை அடைந்துள்ளன.