tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 60 மனுக்கள் தாக்கல்... மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சார்பிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உள்பட 60 மனுக்களுக்கும்  குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பாகவும் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும்  குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மக்களை பிளவுபடுத்தும் வகையிலான இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்தும் திரும்பப்பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்களிலும் நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் வழக்கு
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ரத்து செய்யக்கோரியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அசாம் கண பரிசத் கட்சி, அசாம் அனைத்து மாணவர்கள் சங்கம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வாலிபர் சங்கம் வழக்கு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குடியுரிமை திருத்தச் சட்டமானது அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது; முஸ்லிம்களுக்கு எதிரானது; நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சிறுபான்மை மக்களின் மனங்களில் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஆழமாகஉருவாக்கியிருக்கிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களையும் அகமதியா உள்ளிட்ட முஸ்லிம் மக்களையும் மியான்மரியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ரோஹிங்யா இன முஸ்லிம் மக்களையும் முற்றாக புறக்கணிக்கும் இந்த திருத்தச் சட்டமானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 51 உள்ளிட்ட அனைத்து முக்கிய அடிப்படை மாண்புகளையும் மீறுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவுஜீவிகள்
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பேராசிரியர்கள் பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபிப், சமூக செயற்பாட்டாளர்கள் ஹர்ஷ் மந்தர், அருணா ராய், நிகில்தேய் உள்ளிட்டோரும்; அருணாசலப்பிரதேச முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாடி ரிச்சோ; இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி; அனைத்து அசாம் மாணவர் யூனியன்; முன்னாள் இந்திய தூதர் தேவ் முகர்ஜி; முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சோமசுந்தர் புர்ரா, அமிதவ பாண்டே; அசாம் எதிர்க்கட்சித் தலைவர் தேவபிரதா சைக்யா; அசாம் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காலேக்; ஜன அதிகார் கட்சி தலைவர் பாசில் அகமது; 

அமைதிக் கட்சி; ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய்,  சூர்ய காந்த்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது.அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.திமுக வழக்கறிஞர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படாத நிலையில், அதற்கு தடை விதிக்க வேண்டும் என கேள்வி எப்படி எழுகிறது என்று புதிராக கேட்டார்.அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது.   60 மனுக்கள் குறித்து, மத்திய அரசுபதிலளிக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்து ஷரத்துகளை படித்து, ஆராய்ந்து பார்க்க நாட்கள் தேவைப்படுகின்றன. எனவே வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து,உத்தரவிட்டது. குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பாஜக அரசாங்கம் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியதை ஆட்சேபித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். இதேபோல் எண்ணற்றவர்கள் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அவை உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட்டு விசாரணைத் தேதிகள் நிர்ணயிக்கப்பட இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடுத்துள்ள மனுவில், பாஜக அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, முரணானதுமாகும் என்று தெரிவித்திருக்கிறோம். (It is not only unconstitution but also anti-constitution.)

====சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)====