tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 60 வழக்குகள்.... வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே விசாரணை

புதுதில்லி:
வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மக்களை பிளவுபடுத்தும் வகையிலும் இந்திய நாட்டை மதவெறிக்காடாக மாற்றும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம் உள்ளதாகக் குற்றம்சாட்டி, அச்சட்டத்திற்கு எதிராகவும் அதனை திரும்பப்பெறக்கோரியும் நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும்  பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி
யினர், அமைப்பினர்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

2014 ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்குள் குடியேறிய முஸ்லிம் அல்லாத அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டம் முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களை அனுமதிக்காமல் மதம் இன ரீதியாக பிரிக்கிறது என்றும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அறிவுஜீவிகள், முன்னாள் நீதிபதிகள், பல்வேறு துறை வல்லுநர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. இதனைரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை அவசர மனுவாக பட்டியலிட்டு உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், நாட்டில் பல்வேறு இடங்களில் நிகழும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமேகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.