புதுதில்லி:
இந்தியாவில் வாடகைக் கார் சேவையைஅளிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ‘உபேர்’ விளங்குகிறது. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண் டுள்ள இந்நிறுவனம் உலக அளவில் பல நாடுகளில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று, இந்த நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும்பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த435 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி பேசியுள்ள ‘உபேர் இந்தியா’ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், உபேர் நிறுவனத்தில், இந்தியாவில் எத்தனை பேர் வேலை இழந்துள்ளனர்? என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மாறாக, “நிறுவனத்தில் சில மாற்றங்கள்செய்துகொண்டிருப்பதாகவும் அதனால் இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது என்றும் கூறிய அவர், ‘செய்வதற்கு எந்த வேலையும் இல்லாத ஊழியர்கள்’தான் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், “இந்தியா எங்களுக்கு முக்கியமான நாடுகளில் ஒன்று. இங்கு எங்கள்சேவையை மேம்படுத்த முழு வீச்சில் முயன்று கொண்டிருக்கிறோம். ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில்1000 புதியவர்களை பணிக்கு தேர்வு செய்யதிட்டமிட்டுள்ளோம்.” என்று சமாளித்துள்ளார்.எனினும், உலக அளவில் தயாரிப்புப் பிரிவில் 170 பேர் மற்றும் பொறியியல் பிரிவில் 265 பேர் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டு உள்ளனர்; இது 8 சதவிகிதம் வேலையிழப்பு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய இளைஞர்கள் அனைவரும் ‘உபேர்’ கார்களில்தான் பயணிக்கின்றனர் என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால், அந்த நிறுவனமும் நஷ்டக் கணக்குக் காட்டி, 435 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.