ஷாஜகான்பூர்:
சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், சாமியார் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் முக்கியமானவர் சாமியார் சின்மயானந்தா. மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், தனக்குச் சொந்தமான சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவியரை, சாமியார் சின்மயானந்தா மிரட்டி பாலியல் வல்லுறவுக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக அண்மையில் புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், சின்மயானந்தாவுக்கு எதிரான புகாரை பகிரங்கமாகவே வீடியோ மூலம் வெளியிட்டார். மாணவியின் தந்தையும் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், இவ்விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றதால், தற்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது. புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரமும், குற்றம்சாட்டப்பட்ட சின்மயானந்தாவிடம் 7 மணிநேரமும் என சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, சின்மயானந்தாவுக்கு எதிரான 43 வீடியோக்களை, சிறப்புப் புலனாய்வு விசாரணை குழுவினரிடம் ஒப்படைத்துள்ளார். தன் மகள் ஒரு வருடமாக சின்மயானந்தாவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும், ஒரு கட்டத்தில் மறைமுக கேமிரா வைத்து, சின்மயானந்தாவின் குற்றச் செயல்களை தனது மகள் பதிவு செய்ததாகவும், அவையே தற்போது விசாரணைக்குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.