tamilnadu

img

14 கோடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்... ஜிடிபியில் மொத்தமே 1.5 சதவிகிதம்தான் செலவாகும்

புதுதில்லி:
கொரோனா பேரிடர் நிவாரணமாக, நாடு முழுவதும் சுமார் 14 கோடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 25ஆயிரம் வழங்க வேண்டும் என்று பேராசிரியர் இருதய ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள வளர்ச்சிஆய்வுகள் மையத்தில், மக்கள் தொகை ஆய்வுப் பிரிவில் பேராசிரியராக இருக்கும் இருதய ராஜன், சுமார் 35 ஆண்டுகாலம் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு, ஆய்வுகளை நடத்தி வருபவர் ஆவார். அந்த வகையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்குஅளித்துள்ள நேர்காணலில் பேராசிரியர் இருதய ராஜன் கூறியிருப்பதாவது:“திட்டமிடப்படாத தேசம் தழுவிய பொதுமுடக்கம் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை, கையில் ஒரு பைசா கூட இல்லாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாட்டில் 60 கோடிக்கும் மேல் புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். அதில் 14 கோடி பேர்பெரிய நகரங்களில் மட்டும் உள்ளனர்.இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்ட போது நம்மிடையே 500 கொரோனாதொற்றுக்களே இருந்தன. ஆனால் பொதுமுடக்கத்தைத் தளர்த்தும் போது இன்று 2.5 லட்சம் தொற்றுக்கள் உள்ளன.உலகில் 5-ஆவது பெரிய கொரோனா நாடாகி விட்டோம்.

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்தை செலவிடுவதாக கடந்த மே மாதம் மோடி அரசுஅறிவித்தது. ரூ. 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி மதிப்பிலான அந்த தொகுப் பில், பெரும்பாலான நடவடிக்கைகள் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வதேதவிர, நிதி உதவி அல்லது தேவைப்படுபவர்களுக்கு நேரடி பண உதவி அளிப்பதாக இல்லை.குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்களை நீண்ட காலம், மிக அதிகமாக பாதிக்கச்செய்து விட்டு நிவாரணம் என்றபெயரில் ஒன்றுமே அரசு அளிக்கவில்லை.

ஒரு குடும்பம் எப்படி 5 கிலோ உணவுப்பொருளை மட்டும் வைத்துக் கொண்டு வாழமுடியும்? பெரிய அளவில்வெளியான அறிவிப்புகள் எதுவும் இந்தஏழை மக்களுக்கானதல்ல. ஆனால் இவர்களால்தான் இன்று நாம் கொண்டாடும் நகரங்கள் வளர்ந்துள்ளன.இத்தனை ஆண்டுகளாக தங்கள் குடும்பங்களில் `ஹீரோ-க்களாக இருந்தபுலம்பெயர் தொழிலாளர்களை மோடி அரசு ஜீரோ ஆக்கியுள்ளது. குடும்பத்தின் வாழ்வாதாரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தவர்கள், ஒரே இரவில் சுமையாக மாறிவிட்டனர். வீட்டுக்குவெறுங்கையுடன் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். அதிலும் தொற்றுடன் சிலர் திரும்பியதுதான் மிச்சம். இவர்களது இந்த நிலைக்கான தீர்வு நேரடியாக இவர்களிடம் ரொக்கமாக ரூ. 25 ஆயிரம் அளிப்பதாகத்தான் இருக்கும்.இப்படிச் செய்வதால் ஜிடிபி-யில் 1.5 சதவிகித செலவுதான் அல்லது 3.5 லட்சம் கோடி ரூபாய்தான் செலவாகும்.ஆனால், அவர்களது துயரத்தை துடைக்க இதைச் செய்தால் ஒன்றும் குடிமுழுகி விடாது. ஏனெனில் இவர்கள்தான் நம் பொருளாதாரத்துக்கு பெரிய பங்களிப்பாளர்கள்.14 கோடி தொழிலாளர்களுக்கு தலாரூ. 25 ஆயிரம் வழங்கி, தேவையை உருவாக்குவதன் வாயிலாக பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க முடியும்.

மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டம்தான் அவர்களுக்கு ஓரளவுக்காவது உதவி புரிந்து வருகிறதுஎன்றாலும், இது குறுகிய கால நிவாரணமாகத்தான் இருக்க முடியும்.மீண்டும் வேலை தேடிக்கொண்டால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். புலம்பெயர்தொழிலாளர்களுக்கான பிரத்யேக வாடகை வீட்டுத் திட்டம் இன்னும் காலம்பிடிக்கும். இந்நிலையில் அவர்கள் எப்படிகருணையற்ற முதலாளிகளிடம் மீண்டும்வேலைக்குச் சேர நகரங்களுக்கு வருவார்கள் என்பது தெரியவில்லை.ஒரு நாடு ஒரு ரேசன் திட்டமும் மாநிலங்களின் தேர்வுக்கு விடப்பட்டதால் அதுஅமல்படுத்தப்பட்டாலும் நீண்டகால பயனளிக்குமே தவிர உடனடி பயனிருக் காது.புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது அவர்கள் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக பெருஞ்சுமை என்ற கெட்டப் பெயரையும், மரண வைரஸை சுமந்து வந்தவர்களாகவும் அவப்பெயரை அவர்கள் பெற்றுள்ளனர்.

கிராமங்களுக்கு திரும்பிய இவர்கள் கடும் மனச்சோர்வில் உள்ளனர். ஏற்கெனவே தற்கொலைகள் அதிகமாகி வருகின்றன. பல ஆண்டுகளாக விவசாயிகள்தற்கொலைகளையே நாம் பார்த்திருக்கிறோம். தற்போது புலம்பெயர்வோர் தற்கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கும் ஆபத்து உள்ளது. ஏனெனில், வறுமையையும் பட்டினியையும் எதிர்த்து, அவர்கள் போராட விரும்பவில்லை.என்னுடைய கணிப்பு என்னவெனில் இப்போது ஊர் திரும்பியவர்களில் 30 சதவிகிதம் பேர் மீண்டும் நகரத்துக்குத் திரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் மீள்வதே கடினம். நெருக்கடியில் இவர்களுக்கு உதவிய முதலாளிகளுக்கு மட்டும் இவர்கள் திரும்ப உழைக்கக் கிடைப்பார்கள்.ஆனால், பல முதலாளிகள் இவர்களை நெருக்கடி காலக்கட்டத்தில் கைவிட்டு விட்டனர். பொதுமுடக்கக் காலத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிவெடுத்து தன் தொழிலாளர்களைக் காப்பாற்றும் பொறுப்பை உதறி விட்டனர்.”இவ்வாறு இருதயராஜன் கூறியுள்ளார்.