ஜெய்ப்பூர்
உட்கட்சி பிரச்சனை மற்றும் முதல்வர் பதவி தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ராஜஸ்தான் மாநில துணை முதலவரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏ-களுடன் அரசு எதிராக அதிருப்தியை தெரிவித்தார். 2 முறை ஆளுங்கட்சி சட்டமன்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்பதை தவிர்த்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அவரை கட்சியை விட்டு துரத்தியது. மேலும் கட்சித்தலைவர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவியை அவர் இழந்தார்.
கட்சி எம்எல்ஏ கூட்டத்தில் பங்கேற்காததால் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-களை நீக்குமாறு காங்கிரஸ் கொறடா சபாநாயருக்கு கோரிக்கை விடுத்தது. சபாநாயகர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
நோட்டிசுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்டோர் ராஜஸ்தான் உயர்நதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில் இன்று (வெள்ளி) தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்,"சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சி உச்சநீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.