அலகாபாத்;
தொழிலாளர்களுக்கான வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் உத்தரவை, ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது.கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி, தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 51, 52, 56 மற்றும் 59 ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்களின் வேலைநேரம், மிகை உழைப்புக்கான ஊதியம், வேலை நேரத்திற்கு இடையிலான ஓய்வு ஆகியவற்றை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, உத்தரப்பிரதேச பாஜக அரசு மே 8 அன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
44 தொழிலாளர் சட்டங்களில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், மகப்பேறு கால ஊதியச் சட்டம், சம ஊதியச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம், தொழில்துறை வேலைவாய்ப்புச் சட்டம், தொழில்துறை தகராறு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 38 சட்டங்களை, 3 ஆண்டுகளுக்கு செல்லாது என்று அவசரச் சட்டம் கொண்டு வந்தது.அனைத்து தொழிற்சாலைகளும் 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணிநேரம் தொழிலாளர்களை வேலை வாங்கலாம்; மிகை உழைப்புக்கான கூடுதல் ஊதியம் வழங்க வேண்டியதில்லை; உணவு இடைவேளைக்கான நேரத்தையும் குறைத்துக் கொள்ளலாம் என்று அதில் கூறியது.
பலநூறு ஆண்டுகால போராட்டத்தில் கிடைத்த தொழிலாளர் உரிமைகளை ஒரே உத்தரவில் பறிப்பதாக இது அமைந்தது. இதற்கு உத்தரப்பிரதேச தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வது என்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை என்று மனுவில் குறிப்பிட்டன.இந்த வழக்கு அண்மையில் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி சித்தார்த் வர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்கள், தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது தொடர்பாக, உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட மறுதினமே, 12 மணிநேர வேலைக்கான உத்தரவை மட்டும் உத்தரப்பிரதேச பாஜக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.இதுதொடர்பாக உத்தரப்பிரதேச அரசின் முதன்மை செயலாளர் (தொழிலாளர்) சுரேஷ் சந்திரா, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.