tamilnadu

img

இந்தியாவில் கொரோனாவால் 12 கோடி பேர் ஏழை ஆவார்கள்....

புதுதில்லி:
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் சரிந்து போயிருந்த இந்தியப் பொருளாதாரத்தை, கொரோனா பாதிப்பு மேலும் சீர்குலைத்து விட்டது.

ஏற்றுமதி - இறக்குமதி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. வேலையின்மை 3 மடங்கு அதிகரித்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் உணவுக்கே திண்டாட வேண்டிய நிலைமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.மத்திய பாஜக அரசோ, இதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த நாட்டையும் தனியார் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது.

\இந்நிலையில்தான், இந்தியாவில் ஏற்கெனவே இருக்கும் பொருளாதாரப் பாதிப்பு, கொரோனா தாக்கத்தின் காரணமாக மேலும் அதிகரித்து, இந்தியாவில் நேரடியாகவும் - மறைமுகமாகவும் சுமார் 13 கோடியே 50 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ‘ஆர்தர் டி லிட்டில்’ (Arthur D Little) என்ற சர்வதேச மேலாண்மை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.அதுமட்டுமன்றி, இந்தியாவில் சுமார் 12 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள இந்த நிறுவனம், இந்த மாற்றத்தின் காரணமாக இந்திய மக்களின்  நுகர்வுப் பொருட்கள் மற்றும் நுகர்வின் அளவுகள் குறையும்; எதிர்காலத்திற்கு உத்தரவாதமற்ற மக்கள், முடிந்தளவில் செலவுகளைக் குறைத்து கையில் இருக்கும் சிறிய அளவிலான பணத்தைச் சேமிப்பின் பக்கம் திருப்பவே அதிகளவில் முயற்சி செய்வார்கள் என்றும் விளைவுகளை அடுக்கியுள்ளது.
மேலும், நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் குறைந்து, நாட்டின் ஜிடிபி மற்றும் அதன் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படும்; 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.8 சதவிகிதம் அளவிற்கு சரியும் எனவும் ‘ஆர்தர் டி லிட்டில்’ குறிப்பிட்டுள்ளது.