நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து ஈரோடு நோக்கி செல்வதற்காக 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக, அரசு பேருந்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி நடு சாலையில் நின்றது. இதன் காரணமாக பேருந்து பயணிகள் அவதி அடைந்த நிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மாற்று பேருந்தில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மிகக் குறுகலான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால், பின்புறம் வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பழுதாகி நின்ற அரசு பேருந்தை உரசும் வகையில் மெதுவாக ஊர்ந்து சென்றது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.