நாமக்கல், மே 7-உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பொருள்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், ஆய்வில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரி, உணவகங்கள், டீக்கடைகள் உள்ளன.இவை தவிர, பள்ளி மற்றும் கல்லூரிகளின் உணவு விடுதிகள், கேன்டீன்களும் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள், காரம்,இனிப்பு வகைகள் மற்றும் இதர உணவுப் பொருள்கள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏற்கெனவே உபயோகித்த எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் கூடாது.மேலும், சமையல் எண்ணெய்யை, நாள் ஒன்றுக்கு 50 லிட்டருக்கு மேல் உபயோகம் செய்தால் அவர்கள் பயன்படுத்திய எண்ணெய்யை அப்புறப்படுத்தியதற்கான விவரப் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். எந்தெந்த எண்ணெய் எவ்வளவு அளவு பயன்படுத்தப்பட்டது. அது எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது, மறு சுழற்சி செய்யப்பட்டது போன்ற விவரத்தை பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதால், மனித உடலுக்கு புற்றுநோய் மற்றும் பல உடல் உபாதை உண்டாகி உயிருக்குஆபத்தை விளைவிக்கும். உபயோகம் செய்த எண்ணெய்யை அப்புறப்படுத்திவிட்டோம், மீண்டும் உபயோகப்படுத்தவில்லை என்று முறையாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தற்போது கோடை காலம் என்பதால் சுகாதாரமற்ற பொருள்களால் உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.மேலும், உணவுப் பொருள்கள் சம்பந்தமாக, மக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் 94440-42322 என்ற கட்செவி எண்ணுக்கு புகாரை பதிவு செய்யலாம் என அத்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.