நாமக்கல், ஜூன் 5-திருச்செங்கோடு அருகே ராயபாளையம் சிலுவங்காட்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ராயர்பாளையம் அருகே உள்ளபுல்லாகவுண்டம்பட்டி ஊராட்சி சிலுவங்காடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மூன்று மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இதுகுறித்து குடிநீர் விநியோகம் செய்யும்ஊழியரிடம் பொதுமக்கள் முறையிடும்போது முறையான பதில் கூறாமல் மெத்தனை போக்கில் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று தட்டிக் கழித்து வருகின்றார்.இந்நிலையில், அப்பகுதி மக்கள் விவசாய தோட்டங்களிலும் பக்கத்து கிராமம் கிளாபாளையம் சென்று குடிநீர் பிடித்தும் வருகின்றனர். மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யும் போது தங்களது இயல்பு வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல், பல மணி நேரம் குடிநீருக்காக சைக்கிளில் கிளாப்பாளையம் ஊராட்சிக்கு செல்ல வேண்டியுள்ளது.இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடமும், புல்லாகவுண்டம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக அப்பகுதியில் குடிநீர் பிரச்சனைக் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.